169.பிட்டங்கொற்றன்

      ஆசிரியர்    காவிரிப்பூம்பட்டினத்துக்     காரிக்கண்ணனார்
பிட்டங்கொற்றனைக் காண விழைந்து அவன்  செவ்வி   காண முயன்றார்.
முயலுந்தோறும் அவன் போரில் ஈடுபட்டுப் படையகத்திருந்ததனால் அவனது
செவ்வி யரிதாயிற்று. ஒருகால் அவன் செவ்வி கிடைத்தது. அவன் உடனே
போருக்குச் செல்லவேண்டிய கடமையு மிருந்தது. கிடைத்த செவ்விக்கண்ணே
தாம் பரிசில் பெற்றுச் செல்லவேண்டி இப்பாட்டின்கண் “பெரும, நும்முடைய
படை பகைமேற் செல்லும் போது நீ அதன் முன்னே நிற்கின்றனை;
பகைவர் நும்மேல் செல்லும்  போது   நீ   அதன்  முன்னே நிற்கின்றனை;
பகைவர் நும்மேல்  வருங்கால், நுமது  கூழைப் படையைத்  தாங்கி
ஆற்றிடைக் குறுக்கே  நிற்கும்  கற்சிறைபோல் நிற்கின்றனை; இந்நிலையால்
யான் வருந்தோறும் நின் செவ்வி கிடைப்பதரிதாயிற்று. என் சுற்றத்தார் எய்தி
வருந்தும் இடும்பையோ பெரிதாயிற்று. ஆதலால், இன்னே எனக்குப் பரிசில்
தந்து விடைதர வேண்டுகின்றேன்; பொருநரால் தொலைக்க முடியாத நின்
வென்றி விளங்குவதாக”என்று விளம்புகின்றார்.

 நும்படை செல்லுங் காலை யவர்படை
எடுத்தெறி தானை முன்னரை யெனாஅ
அவர்படை வரூஉங் காலை நும்படைக்
கூழை தாங்கிய வகல்யாற்றுக்
5குன்றுவிலங்கு சிறையி னின்றனை யெனாஅ
 அரிதாற் பெருமநின் செவ்வி யென்றும்
பெரிதா லத்தையென் கடும்பின் திடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
10இகலின் ரெறிந்த வகலிலை முருக்கின்
 பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே.
(169)

     திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனைக்
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

     உரை:நும்  படை  செல்லுங்  காலை - நும்முடைய  படை
பகைவர்மேற் போங்காலத்து; அவர்  படை எடுத் தெறி தானை
முன்னரை எனாஅ - அவரது   படையாகிய   வேல் முதலாயவற்றை
ஓங்கி யெறிவும் படைக்கு முன்னே நிற்பை யாகலானும்; அவர் படை
வரூஉங் காலை - அவர் படை அடர்த்து வருங் காலத்து; நும் படைக்
கூழை தாங்கிய - நும்  படையினது  அணியைத் தாங்க வேண்டிய;
அகல்  யாற்றுக்  குன்று  விலங்கு  சிறையின் நின்றனை  எனாஅ -
அகன்ற ஆற்றின்கண் குறுக்கே தடுத்துக் கிடக்கின்ற மலையையொப்ப
அதனைத் தடுத்து நின்றாயாதலானும்; பெரும - பெருமானே; நின்
செவ்வி அரிது என்றும் - நின்னைக் காணலாங் காலம் பெறுதலரிது
எந்நாளும்; என் கடும்பினது இடும்பை பெரிது - எனது சுற்றத்தினது
இடும்பை பெரிதாதலால்; இன்னே பரிசில் விடுமதி - நீ இப்பொழுதே
எனக்குப் பரிசில் தந்து விடுவாயாக; வென் வேல் இளம் பல் கோசர்
- வென்றி வேலையுடைய இளைய  பல  கோசர்;   விளங்கு படை
கன்மார் - விளங்கிய  படைக்கலங்  கற்பார்; இகலினர்  எறிந்த
மாறுபட்டனராய் எறிந்த; அகல் இலை முருக்கின் பெரு மரக் கம்பம்
போல - அகன்ற இலையையுடைய முருக்காகிய பெரிய மரத்தாற்
செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல; பொருநர்க்குலையா
நின்  வலன் வாழிய - பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி
வாழ்வதாக எ-று.

         எனா என்பன எண்ணிடைச்சொல். எளிதாலத்தை யென்று பாட
மோதுவாரு முளர்.

        விளக்கம்: முன்னர் என்பது முன்னிலைக்குறிப்பு வினையாய்
முன்னரையென வந்தது; முன்னே நிற்பா யென்பது பொருள். பின்னே
அணிவகுத்து வரும் படை கூழைப்படை. அகல் யாற்றுக் குன்று விலங்கு
சிறை, அகல் யாற்றுக் குன்று சிறை, விலங்கு சிறை யென இயையும்; குன்று
சிறை, குன்றாகிய சிறை, குறுக்கே தடுத்துக் கிடக்கும் சிறை யென வரும்.
“வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை”
(தொல். புறத்.8) என்பது காண்க. சிறை, அணை. ஒன்று மேற்சேறல், ஒன்று
வருபடை தாங்கல் என்ற இரண்டினும் நீ இருபடைக்கும் இடையே
நிற்றலின், “என்றும் நின் செவ்வி எமக்கு அரிதாயிற்”றென்றார். நின்
செவ்வி பெறுவதோ அரிது; என் கடும்பின் இடும்பையோ பெரிது என்றது,
விரையப் பரிசில் தரவேண்டுமென்பதை வற்புறுத்துகிறது. கோசர், ஒருவகை
வீரர்; இவரைப்  பற்றிப்  பல  குறிப்புக்கள்  சங்கத்தொகை  நூல்களில்
காணப்படுக்கின்றன; இவர் சொன்னலமுடையர். அத்தை, ஆல் என்பன
அசைநிலை.