12. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப்பாட்டின்கண், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தன் பகைவர்க்கு இன்னாவாக, அவர்தம் நாட்டை வென்று கைக்கொண்டு, தன்னை வந்து அன்பால் இரக்கும் பரிசிலராகிய பாணர் பொற்றாமரைப்பூச் சூடவும், புலவர் யானையும் தேரும் பெற்றேகவும் இனியவற்றைச் செய்கின்றான்; இஃது அறமோ என நெட்டிமையார் அவனைப் பழிப்பது போலப் புகழ்கின்றார். | பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் | 5. | டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. (12) | திணை : அது. துறை: இயன்மொழி. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை: பாணர் தாமரை மலையவும் - பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும்; புலவர்-; பூ நுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் - பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும்; அறனோ இது - அறனோ இவ்வாறு செய்தல்; விறல் மாண்குடுமி - வெற்றி மாட்சிமைப்பட்ட குடுமி; பிறர் மண் இன்னாவாகக் கொண்டு - வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு; நின் ஆர்வலர் முகத்து இனிய செய்தி - நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை எ-று. குடுமி, பிறர் மண் இன்னாவாகக்கொண்டு, மலையவும், பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை: இது நினக்கு அறனோ சொல்லுவாயாக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மற்று: அசைநிலை. இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க.
விளக்கம்:பொன்னாதல் தாமரைப்பூச் செய்து அதனை வெள்ளியாற் செய்த நாரிடைத் தொடுத்தது பொன்னரிமாலை; இதனைப் பாணர்க்கு வழங்குதல் மரபாதலால்,பாணர் தாமரை மலையவும்என்றார்; ஒள்ளழல் புரிந்த தாமரை,வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே(புறம்.11) என்பது காண்க. புலவர்க்குக் களிறும் தேரும் நல்குதலும் பண்டையோர் மரபு: புலவர் புனை தேர் பண்ணவும் என்றார். மலைதல், சூடுதல். பண்ணல், ஏறுதற்கேற்ப அமைத்தல். நுதல், மத்தகத்துக் காயிற்று. பூ, பொற்பட்டம். அன்பு கொள்ளாது பகைமையைக் கொண்டமையின், பகைவேந்தரைப் பிறர் என்றும், அன்பு செய்து பரவிப் புகழ்வாரை ஆர்வலர்என்றும் கூறினார். ஒருவர்க்குரிய நிலத்தைப் பிறர் வலியாற் கொள்ளுமிடத்து உரியார்க்கு வருத்தமுண்டாதல் இயல்பாதலால், பிறர் மண் இன்னாவாகக் கொண்டு என்றார். வேந்தே, நீ ஒருபால் இனிமையும், ஒருபால் இன்னாமையும் செய்தல் அறனோ என்று வினவுவது பழிப்புரை. ஆர்வலர்க்கு இன்பம் செய்தலும், பகைவர்க்கு இன்னாமை செய்தலும் விறல் மாண்ட வேந்தர்க்குப் புகழாதலால்,அதனைக் கூறுதல் புகழாயிற்று.புகழைப்பழி போலக் கூறுதலின், இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க என்றார். இதனை வஞ்சப் புகழ்ச்சி யென்றும் கூறுப. |