141. வையாவிக் கோப்பெரும் பேகன்

    பண்டைத் தமிழகத்துக் குறுநில மன்னர்களில் எவ்வியர் குடி, ஆவியர்
குடி, அதியர் குடியெனப் பல குடிகள் உண்டு. வேள் பாரி எவ்வி
குடியிலும் அதியமான் நெடுமானஞ்சி அதியர் குடியினும் பிறந்து
பிறங்கினாற் போல, வையாவிக் கோப்பெரும் பேகன் ஆவியர் குடியிற்
பிறந்து சிறந்தவன். ஆவியர் முதல்வனான வேள் ஆவி யென்பான்
பண்டைப் பொதினி நகர்க்கண் இருந்து அரசு புரிந்தவன். அப் பொதினி
பிற்றை நாளில் பழனி யென்றும், பின்பு வையாவி யென்பது வையா
புரியென்றும் மருவி வழங்கலாயின. இது திரு ஆவி நன்குடி யெனவும்
வழங்கும். வையாவிக் கோப்பெரும் பேகன் பெருவள்ளலாவன். ஒரு கால்
மயிலொன்று கார்முகில் வரக்கண்டு களித்துத் தன் தோகையை விரித்தாட,
அதுகண்ட பேகன், அதன் ஆடலை வியந்தும் குளிரால் நடுங்குகின்றதென
நினைந்தும் தனக்கு உடையும் போர்வையுமாகிய உயரிய ஆடையை
யளித்துப் புலவர் பாடும் புகழ் மேம்பட்டான். இத்தகைய அருணிரம்பிய
வள்ளலாகிய பேகனுக்குத் திண்ணிய கற்பமைந்த மனைவியார் ஒருவர்
உண்டு. அவர் பெயர் கண்ணகியென்பது. கண்ணகியாரோடு கூடிக்காதல்
வாழ்வு நடாத்தும் பேகனுக்கு, அவன் நாட்டு நல்லூரின்கண் வாழ்ந்த
பரத்தை யொருத்திபால் புறத்தொழுக்க முளதாயிற்று. நாளடைவில் அப்புறத்
தொழுக்கம் முறுகி வளரவே, அவன் கண்ணகியைக் கைதுரந் தொழுக
லுற்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாயிற்று. இதன் விளைவு தீதா
மென்றறிந்த அக்கண்ணகியார் பெரிதும் வருந்தலுற்றார். அவர் பொருட்டுக்
கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் முதலியோர்
பேகன்பாற் சென்று தகுவன கூறித் தெருட்டலுற்றனர். பின்னர் அவனும்
தேறித் தன் மனைவியாரொடு கூடி இனிதிருந்து நல மெய்தினான்.

     ஆசிரியர் பரணர், வையாவிக் கோப்பெரும் பேகன் களிமயிற்குப்
போர்வை யளித்துப் புகழ் மேம்படுவது கேள்வியுற்று அவனைக் காணச்
சென்றார். அவனும் அவர் வரிசை யறிந்து பெரும் பொருள் நல்கிச்
சிறப்பித்தான். அதனைப் பெற்றுக்கொண்டு வருங்கால், அவர் வழியில்
பரிசில்  தருவாருளரோ  வென  வறுமையுற்று   வருந்தி  வரும்
பாணனொருவனைக் கண்டார். அவனும் இவரை, “நீவிர் யார்? என
வினவ,  இவர்,   அவனைப்  பேகன்பால்  ஆற்றுப்படுப்பாராய்,   தம்மை
யொரு பாணனாக நாட்டிக் கொண்டு, “இரவல, யாமும் வள்ளல் பேகனைக்
காணாமுன்  நின்னினும்  புல்லியேமாயிருந்தேம்.  அவனைக் கண்டபின்
இத்தன்மையேமாயினேம்.  நீயும்  அவன்பாற்  செல்க. அவன்
மஞ்ஞைக்குப் படாம் ஈந்தவன்; எத்துணையாயினும் இரப்பார்க் கொன்று
ஈதல் நன்று என்றுகருதுபவன்; அவன் கொடை மறுமைப்பயன் நோக்குவ
தன்று; பிறர் எய்தி வருந்தும் வறுமைத் துன்பத்தைப் போக்குவதையே
நோக்கி நிகழ்வது. ஆதலால், நீ அவன்பால் இன்னே செல்வாயாக” என்ற
கருத்துப்படப் பாடினார். அப்பாட்டே இது.

பாணன் சூடிய பசும்பொற் றாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
5யாரீ ரோவென வினவ லானாக்
 காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
10உடாஅ போரா வாகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
15பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே. (141)

     திணை : அது. துறை : பாணாற்றுப்படை;
புலவராற்றுப்படையுமாம். வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர்
பாடியது.

    உரை : பாணன் சூடிய பசும் பொன் தாமரை - பாணன் சூடிய
ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ; மாணிழை விறலி
மாலையொடு விளங்க - மாட்சிமைப்பட்ட அணியினையுடைய விறலி
யணிந்த பொன்னரி மாலையுடனே விளங்க; கடும் பரி நெடுந்தேர்
பூட்டு விட்டு அசைஇ - கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப்
பிணிப்புவிட்டு இளைப்பாறி; ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் -
ஊரின்கண் இருந்தீர் போலச் சுரத்திடை இருந்தீர்; யாரீரோ என -
நீர் யாவிர் பாணரோ என; வினவலானா - எம்மைக் கேட்டலமையாத;
காரென் ஒக்கல் கடும் பசி இரவல - புல்லென்ற சுற்றத்தையும் மிக்க
பசியையுமுடைய இரவலனே; வென் வேல் அண்ணல் காணா
ஊங்கு - வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன் முன்;
நின்னினும் புல்லியேம் மன் - யாம் நின்னினும் வறியேம்; இனி -
இப்பொழுது; இன்னேம் ஆயினேம் - அவ்வறுமை நீங்கி இத்
தன்மையே மாயினேம்; என்றும் - எந்நாளும்; உடாஅ போரா
ஆகுதல் அறிந்தும்- உடா போராவாதலை யறிந்து வைத்தும்;
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்தஎம்கோ - படாத்தினை மயிலுக்குக்
கொடுத்த எம் இறைவன்; கடாஅ யானைக் கலிமான் பேகன் -
மதமிக்க யானையினையும் மனஞ் செருக்கிய குதிரையினையுமுடைய
பேகன்; எத்துணையாயினும் ஈத்தல் நன்றென - எவ்வளவாயினும்
கொடுத்தல் அழகிதென்று; மறுமை நோக்கின்றோ அன்று -
மறுபிறப்பை நோக்கிற்றோவெனின் அன்று; பிறர் வறுமை
நோக்கின்று அவன் கைவண்மை - பிறரது மிடியைக் கருதிற்று
அவனது கைவண்ணம் எ-று.

    
எங்கோ பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்றன்று பிறர்
வறுமை நோக்கிற் றெனக் கூட்டுக. “நின்னினும் புல்லியேம் மன்”என்பது
“பண்டு காடு மன்”என்பதுபோல நின்றது. ஒழிந்த மன்: அசைநிலை.

     விளக்கம்:பாணாற்றுப்படை   வாயிலாகப்    பேகன்    
புகழைப் பாராட்டுகின்றவர், தம்மையும் பாணனாக நாட்டிக்கொண்டமையின்,
தம்மைக் காணும் பாணன்முன் தாமிருக்கும் நிலையினை, பாணன் சூடிய
தாமரைப் பூவும் விறலியணிந்த பொன்னரி மாலையும் விளக்கமுற
விருப்பத்தை யெடுத்தோதினார். சுரத்திடத்தே யிருந்தாராயினும் வேண்டுவ
நிரம்பப்பெற்று இனிதிருத்தல் தோன்ற, “ஊரீர் போல இருந்தனிர்”
என்றதாகக் கூறினார். இதனால் பேகனது காவற்சிறப்பும் ஓராற்றால்
வெளிப்படுகிறது. வறுமையால் வாடி மேனியும் முகமும் கருத்துத்
தோன்றுதலால், “காரென் ஒக்கல்”என வேண்டிற்று. தமது செல்வ
நிலை, வந்த பாணன் இனிது கண்டறிய விளங்குதலால்,
“இன்னேமாயினேம்”என்றொழிந்தார். மயில்கள் படாம் பெறின்,  
அவற்றை உடுப்பதோ மெய்ம்மறையப் போர்த்துக் கொள்வதோ
செய்யாவாயினும்,  மயிற்குப்  படாஅம்  நல்கின  கொடை மடம்
விளங்க, “உடாஅ போரா ஆகுதலறிந்தும்”என்றார். உடா, போரா
எனப் பன்மையாற்கூறியது, மயில்கள் பலவும் எஞ்சாமல் அடக்கி நின்றது.
மயில்களின் பொதுவியல்பாகிய இதனை யறிந்து வைத்தும், படாஅம்
ஈந்தான் என்றது, நும்பால் வேண்டப்படாத மிகச் சிறந்த பொருளையும்
அவன் நுமக்கு மிக நல்குவன் என்ற குறிப்புத்தோன்ற நின்றது. படாம்,
துகில். ஈத்தல் நன்றென மறுமை நோக்காது வறுமை நோக்கின்று என
இயையும். மன்: ஒழியிசை.