39. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

     இக் கிள்ளி வளவனை இப் பாட்டின்கண் மாறோக்கத்து
நப்பசலையார், “வளவ, நின்னைப் பாடுங்கால் நின் ஈகையைப் புகழ்வதும்
புகழாகாது, அது நின் முன்னோர் செய்கை; பகைவரை யடுதலும் புகழன்று,
நின் முன்னோர் தூங்கெயி லெறிந்தவர்; முறை செய்தலும் புகழன்று,
நினக்குரிய உறந்தையில் அறம் நிலை நிற்பது; சேரரது வஞ்சி நகரை
யலைக்கும் நின் வென்றி யான் பாடும் திறமன்று” என்று பாராட்டுகின்றார்.

புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதனின் புகழு மன்றே சார்தல்
5. ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற் றாகலி னதனால்
10. முறைமையின் புகழு மன்றே மறமிக்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கன மொழிகோ யானே யோங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்
15. டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. (39)

     திணையும் துறையும் அவை. அவனை மாறோக்கத்து
நப்பசலையார் பாடியது.

     உரை: புறவின் அல்லல் சொல்லிய - புறவினது வருத்தத்தைக்
களைய வேண்டி; கறை யடி யானை வான் மருப் பெறிந்த -
பொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற்
கடைந்து செறிக்கப்பட்ட; வெண் கடைக் கோல் நிறை துலாம்
புக்கோன் மருக - வெளிய கடையினையுடைய கோலாகிய
நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலை புக்க செம்பியனது
மரபினுள்ளா யாதலான்; ஈதல் நின் புகழும் அன்றே -
இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக் கியல்பாவதல்லது புகழு மல்லவே;
ஒன்னார் சார்தல் உட்கும் - அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள்
கிட்டுதற்கு வெருவும்; துன்னரும் கடுந்திறல் - அணுகுதற்கரிய மிக்க
வலியையுடைய; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் -
ஆகாயத்துத் தூங்கெயிலை யழித்த நின்னுடைய முன்னுள்ளோரை
நினைப்பின்; அடுதல் நின்புகழும் அன்றே - ஈண்டுள்ள பகைவரைக்
கொல்லுதல் நினது புகழும் அல்லவே; கெடு வின்று - கேடின்றி,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்
றாகலின் - மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண்
அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்ற தாதலால்; முறைமை நின்
புகழும் அன்றே - முறைமை செய்தல் நினக்குப் புகழு மல்லவே;
அதனால்-; மறம் மிக்கு எழு சமம் கடந்த - மறம் மிக்கு
எழுந்திருந்த போரை வென்ற; எழு உறழ்திணி தோள் - கணைய
மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்; கண்ணார்
கண்ணிக் கலியமான் வளவ - கண்ணிற் கார்ந்த கண்ணியையும்
மணம் செருக்கிய குதிரையையுமுடைய வளவ; யாங்கனம் மொழிகோ
யான் - எவ்வாறு கூறுவேனோ யான்; ஓங்கிய வரை அளந் தறியா -
உயர்ந்த எல்லையளந் தறியப்படாத; பொன் படு நெடுங் கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி-பொன் படுகின்ற நெடிய
சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற்
பொறியையும்; மாண்புனை நெடுந்தேர் வானவன் தொலைய -
மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையுமுடைய
சேரன் அழிய; வாடா வஞ்சி வாட்டும் - அவனது அழிவில்லாத
கருவூரை யழிக்கும்; நின் பீடு கெழு நோன்றாள் பாடுங்கால் - நினது
பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடுங் காலத்து எ-று.

     நின்னைப் பாடுங்கால் என்பார், அவனது சிறப்புத் தோன்றத் தாம்
பாடுங்கால் என்றார். தாளை முயற்சி யெனினு மமையும். நிறை துலாம்
புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழு மன்று;
தூங்கெயி லெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின்
புகழுமன்று; உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்றாதலின், முறைமை
நின் புகழுமன்று; அதனால், கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான்
யாங்கன மொழிகோவெனக் கூட்டுக. அதனால் யாங்கன மொழிகோவென
வியையும். மருக வென்புழி ஆதலானென்பது ஆற்றலாற் போந்த
பொருளெனக்  கொள்க.  கறையடி  யென்பதற்கு  உரல் போலும்
அடியென்பாரு முளர்.

     விளக்கம்: சொல்லிய என்புழிச் சொல்லுதல் களைதல் என்னும்
பொருளது; “ஒக்கல் ஒக்கஞ் சொலிய” (புறம்.327) எனப் பிறரும் கூறுதல்
காண்க. நின் புகழ் - நினக்குப் புகழ் என நான்கனுருபு விரித்துக்
கொள்ளப்பட்டது. கடுந் திறல்: கடுமை: மிகுதி. ஊங்கணோர் - முன்னோர்.
கெடுவின்று என்புழிக் கெடுவென்பது முதனிலைத் தொழிற் பெயர்;
“கெடுவாக வையா துலகு” (குறள்.117) என்றாற் போல. ஏழு சமம் - மறத்தீக்
கிளர்தலால் எழுந்து வீறிட்டுச் செய்யும் போர். வரை - எல்லை. ஏம
விற்பொறி - காவலாகிய விற்பொறி; சேரமான் தன்னரசு காவலாகிய ஆணை
செல்லுதற் கெல்லையாக இட்ட பொறியாதலால், “ஏம விற்பொறி” என்றார்.
வானவன் சேரன்; சேரரை வானவ ரென்றும் வான வரம்ப ரென்றும்
வழங்குப; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று ஈண்டுக்
கருதப்படுகின்றான். சீனர் தம்மை வானவர் என்று கூறிக்கொள்வது
கொண்டு,  சேரர்  பண்டு  சீனநாட்டிலிருந்து குடியேறியவரென முடிபு
செய்வது, வரலாறறியாதார் தவறுடைக் கூற்றாகும். பாடுதற்குச் சிறப்புடையது
தாள் எனஅறிக; “வாய்வாள் வளவன் வாழ்கெனப், பீடுகெழு நோன்றாள்
பாடுகம் பலவே” (புறம்.393) எனப் பிறரும் தாளே பாடுதல் காண்க.