131. வேள் ஆய் அண்டிரன் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய் குடியின் நீங்கிக் காட்டு நாட்டிற் புகுந்து அதன் இயற்கைவளம் காணச் சென்றார். காடுகளில் எங்கும் யானைகளின் நிரை மிகுதியாக மேய்வதை அவர் நேரிற் கண்டார். மோசியார், யானைமிக்க காட்டு நாட்டவரல்லராதலின், அவர்க்கு வியப்பு மிகுதியாயிற்று. யானைகளின் மிகுதி அவர் நெஞ்சில் ஆய் அண்டிரனது யானைக்கொடை பற்றிய நினைவு எழுந்தது. அங்கிருந்தோரை நோக்கி, இக்காடுகள் ஆய் அண்டிரனுடைய குன்றங்களைப் பாடினவோ? அவனையும் அவன் குன்றத்தையும் பாடும் பரிசிலர்களைப் போல மிக்க யானைகளை இவையும் உடையவா யிருக்கின்றனவே! என்ற கருத்துப்பட இப்பாட்டைப் பாடியுள்ளார். மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே. (131) |
திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.
உரை : மழைக் கணம் சேக்கும் மாமலைக் கிழவன் - முகிலினம்சென்று தங்கும் உயர்ந்த மலைக்குத் தலைவன்;வழைப்பூங் கண்ணி - சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினையும்; வாய் வாள் அண்டிரன் - வாய்ந்த வாளினையுமுடைய அண்டிரனது; குன்றம் பாடினகொல் - மலையைப் பாடினவோ; இக் கவின் பெறு காடு - இந்தக் கவினையுடைய காடு; களிறு மிக உடைய - களிறுகளை மிகவுமுடைய எ-று.
யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டிலும் அண்டிரனைப் பாடினோர் யானை மிகவு முடையரென்று அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிர னென்பதும் ஒரு பெயர்.
விளக்கம் : மாமலைக் கிழவனாகிய அண்டிரனுடைய குன்றம் பாடின கொல்லோ, இக் கவின்பெறு காடு களிறு மிக வுடையவாகலான் என இயையும். தன்னையும் தன் மலையையும் பாடி வருவோர்க்கு எண்ணில்லாத யானைகளை ஆய் அண்டிரன் கொடுப்பதை நேரிற் கண்டு மகிழ்ந்துள்ளாராகலின், இக் கவின்பெறு காடு களிறுமிக வுடையவாகலான், குன்றம் பாடின கொல்லோ என்றார். ஆய் அண்டிரனைப் பாடிய பரிசிலர் அவன் நல்கும் உணவாலும் அணிகலங்களாலும் கவின்பெறுவதோடு களிறுகளையும் மிகப் பெற்றுச் செல்வதுப்பற்றி, இக் கவின் பெறுகாடு என்று சிறப்பித்தார். பசுந் தழை போர்த்துப் பூவும் காயும் கனியும் தாங்கிநிற்பது விளங்க, கவின்பெறு காடு எனச் சிறப்பிக்கப் பட்டது. மழைக்கணம் - முகிற்கூட்டம். சேக்கும் - தங்கும். வழை - சுரபுன்னை. |