143. வையாவிக் கோப்பெரும் பேகன் வையாவிக் கோப்பெரும் பேகன் நல்லூர்ப் பரத்தையொடு பூண்ட புறத்தொழுக்கம் முறுகியதனால் தன் மனைவியாகிய கண்ணகியாரைக் கைதுறந்தானாக, அக் கண்ணகியார் பொருட்டுச் சான்றோராகிய கபிலர், அப் பேகனிடம் சென்று அவன் தெருளத் தகுவன கூறக் கருதி, இப் பாட்டின்கண், பாணனொருவன் கூற்றில் வைத்து, கடவுளை வழிபட்டு மழை நீங்கத் தினை விளைதலால் அதனைக் குறவர் உண்ணும் மலைநாடனாகிய பேகனே, நெருநல் யாங்கள் மலைச்சாரற் சீறூர்க்குப் போந்து பசி வருத்துதலின் உணவு வேண்டி, நின்னையும் நின் மலையையும் பாடி நின்றேம்; அப் பாட்டிசை கேட்டு இளமகள் ஒருத்தி கண்ணீர் மார்பகம் நினைப்பக் குழலிசைப்பது போலப் புலம்பினாள். அவள் யாரோ; மிகவும் நின்னால் அளிக்கத்தக்கவளாய் உள்ளாள் என்று கூறியுள்ளார். | மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய வுவகையர் சாரற் | 5 | புனைத்தினை யயிலு நாட சினப்போர்க் | | கைவள் ளீகைக் கடுமான் பேசு யார்கொ லளிய டானே நெருநற் சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக் குணில்பாய் முரசி னிரங்கு மருவி | 10 | நளியிருஞ் சிலம்பிற் சீறூ ராங்கண் | | வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று நின்னுநின் மலையும் பாட வின்னா திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் முலையக நனைப்ப விம்மிக் | 15 | குழலினை வதுபோ லழுதனள் பெரிதே. (143) |
திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; தாபத நிலையுமாம். அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
உரை : மலை வான் கொள்க என - மலையை மழை வந்து சூழ்க வென்று; உயர் பலி தூஉய் - மிக்க பலியைத் தூவி; மாரி ஆன்று மழை மேக்கு உயர்க வென - அம் மழை மிகப் பெய்தலான் அப் பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டுமென; கடவுள் பேணிய குறவர் மாக்கள் - தெய்வத்தைப் போற்றிய குறமாக்கள்; பெயல் கண் மாறிய உவகையர் - மழை இடத்து மாறிய உவகையராய்; சாரல் புனத் திணை அயிலும் நாட - மலைச் சாரற்கண்புனத்தினையை யுண்ணும் நாட; சினப் போர் - சினத்தினாற் செய்யும் போரையும்; கைவள் ஈகை - கை வண்மையாற் கொடுக்கும் கொடையினையு முடைய; கலிமான் பேக - விரைந்த குதிரையையுடைய பேக; அளியள் யார் கொல் - அவ் வருளத்தக்காள் யாரோதான்; நெருநல் - நேற்று; சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென - சுரத்தின்கண்ணே நடந்து வருந்திய எனது சுற்றம் பசித்ததாக; குணில் பாய் முரசின் - கடிப்பு அறையப்பட்ட முரசு போல; இரங்கும் அருவி - ஒலிக்கப்பட்ட அருவியையுடைய; நளி இருஞ் சிலம்பின் சீறூராங்கண் - பெரிய உயர்ந்த மலைக்கண் சிறிய ஊராகிய அவ்விடத்து; வாயில் தோன்றி - வாயிற்கண்ணே வந்து தோன்றி; வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட - வாழ்த்தி நின்று நின்னையும் நின் மலையையும் பாட; இன்னாது இகுத்த கண்ணீர் - அப்பொழுது இன்னாதாகச் சொரியப்பட்ட கண்ணீரை; நிறுத்தல் செல்லாள் - ஒழித்தல் மாட்டாளாய்; முலையகம் நனைப்ப விம்மி - முலையிடத்தை நனைப்பப் பொருமி; குழல் இனைவது போலபெரிது அழுதனள் - குழல் இரங்கி யொலிப்பது போல் மிகவும் அழுதாள் எ-று.
மழை வேண்டுங் காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்தொழித்தற்கும் பலிதூஉய்ப் பேணிய குறவராகிய மாக்க ளென்க. குறவர் மாக்கள்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. மாக்கள் புனத்தினை அயிலும் நாட, பேக, என் ஒக்கல் பசித்தென வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாடக் குழல் இனைவதுபோல அழுதாள்; அவ்வளிக்கத்தக்காள் யார்கொல், அவள்பால் அருள் பண்ணத் தகுமென வினைமுடிக்க.
இது, நின் மலையிற் குறவர் மாக்கள் கடவுட்பேணி மழை வேண்டிய பொழுது பெற்றுத் தாம் வேண்டு முணவு நுகருமாறுபோல, இவளும் நின் அருள்பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டு மென்பதொரு நயந்தோன்ற நின்றது. மழை மிகப் பெய்தலா னென்பது ஆற்றலாற் கூறப்பட்டது.
பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனோடு கூட்டலுறுவார், அருள் பண்ண வேண்டுமென்று இரந்து கொண்டு கூறினமையின், குறுங்கலியாயிற்று.
விளக்கம் :மழை குறித்துக் குறவர் கடவுளைப் பேணும் மரபை நற்றிணைப் பாட்டொன்று மலைவான் கொள்கெனக், கடவுளோங்கு வரை பேண்மார் வேட்டெழுந்து, கிளையொடு மகிழுங் குன்ற நாடன் (நற். 165) என்று கூறுதல் காண்க. ஊர்க்குப் புறத்தேயுள்ள மன்றினை வாயில் என்றார். கண்ணகியார் அழு துகுத்த கண்ணீர் இனிதன்று; இன்னாமை விளைவிப்ப தென்பார், இன்னா திகுத்த கண்ணீர் என்றார். நின்னையும் நின் மலையையும் பாடக் கேட்டு மகிழவேண்டிய கண்ணகி யார், கண்ணீருகுப்பது இன்னாதாக அதனை நிறுத்துமாறு யாம் வேண்டிய வழியும் நிறுத்தாது அழுதன ரென்பார், குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிது என்றார். இதனாற் பயன், அவரது கண்ணீர் இன்னாதாகலின் விரைந்து சென்று அதனைத் துடைத்து நிறுத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பெச்சத்தாற் பெற வைத்தார். கண்ணகியார் பொருட்டுப் பேகன் மனந்தெருள்விக்கச் சென்றவிடத்து, அவனது நாட்டுக் குறவர் செயலை விதந்தோதியதன் கருத்து இதுவென்பார், இது நின் மலையிற் குறவர் மாக்கள்... நயந்தோன்ற நின்ற தென்றார். மழை மேக்குயர்கவென வேண்டுவது அது மிகப் பெய்த காலத்தாகலின், மிகப் பெய்தலான் என்பதை வருவித்து ஆற்றலால் என்றார். முன்னும் பின்னும் நிற்கும் சொற்கள் இயைதற்குரிய இயைபு ஆற்றலெனப்படும். |