170. பிட்டங்கொற்றன்

     சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனைப் பாடி
அவன் தந்த சிறப்புக்களைப் பெற்று இனிதிருந்த உறையூர் மருத்துவன்
தாமோதரனார், சேரமான்   கோதையின் படைத்துணைவனான   பிட்டங்
கொற்றனுடைய வண்மையும் போர் வன்மையும் கேள்வியுற்று அவன்பால்
பெருமதிப்புடையரானார். குதிரைமலையைச் சார்ந்த அவனது நாட்டிற்குச்
சென்று அவனைக் கண்டு  இன்புற்றார். அவனும் அவரை வரவேற்றுத்
தன்பால் சின்னாள் இருக்கச் செய்தான். அக்காலை, கொற்றனொடு பொரக்
கருதிய பகைவர் போர் தொடுத்தற்குச் சமைந்திருந்தனர். அதனை ஒற்றரால்
அறிந்தபோது,  அவையிடத்திருந்த தாமோதரனார்  அப் பகைவரது ஒற்றர்
அறியுமாறு  இப்பாட்டால்  கொற்றனது வல்லாண்மையை விதந்தோதினார்.
இதன்கண், “பகைவர்களே, மலை  நாடனாகிய  கொற்றனைக் குறுகற்கு
நினையாதீர்கள். அவன் விறலியர்க்கு முத்தை ஈந்து, தேறலால் பாண் கடும்
பருத்தித்  தன்னை  நயத்தவர்க்கு  மென்மைத்  தன்மையும்  நயவார்க்கு
வன்மைத்தன்மையு முடையனாய் விளங்குகின்றான். பகைவர்க்குக் கொல்லன்
கூடத்தா லெறியும் உலைக்கல் போலும் வல்லாண்மை யுடையன்; அதனால்
நீவிர் குறுகின் கெட்டழிவது திண்ணம்”என்று கூறியுள்ளார்.

 மரைபிரித் துண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றி லங்குடிச் சீறூர்
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழு துண்மார் நாப்ப ணொல்லென
5 இழிபிறப் பாளர் கருங்கை சிவப்ப
 வலிதுரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டற்
 குறுக லோம்புமின் றெவ்வி ரவனே
10சிறுகண் யானை வெண்கோடு பயந்த
 ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து
நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல்
பண்மை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி
நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க்
15கிரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
 விசைத்தெறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் லன்ன வல்லா ளன்னே.  
(170)

     திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; தானைமறமுமாம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

     உரை: மரை  பிரித் துண்ட நெல்லி வேலி - மரையாவாற்
பிரித்துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியை யுடைத்தாய்; பரலுடை
முன்றில்   - அதனது   விதையாகிய   பரலுடைத்தாகிய
முற்றத்தினையுடைய; அங் குடிச் சீறூர் - அழகிய குடியையுடைய
சிறிய வூரின்கண்; எல் அடிப் படுத்த - பகற்பொழுதெல்லாம்
வேட்டையாடித் திரிந்த; கல்லாக் காட்சி வில்லுழு துண்மார்
நாப்பண் - கல்வியில்லாத  காட்சியையுடைய  வில்லாகிய  ஏரா
லுழு துண்பாருடைய  நடுவே; ஒல்லென - ஒல்லென்னு  மோசையை
யுடைத்தாக; இழி பிறப்பாளன் - இழிந்த பிறப்பினையுடைய
புலையன்; கருங்   கை  சிவப்ப - தனது  வலிய கை சிவப்ப;
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி - வலியான் முடுக்கிக்
கொட்டும் வலிய கண்ணையுடைய அச்சத்தைச் செய்யும் துடி; புலி
துஞ்சு நெடு வரைக்  குடிஞையோடு  இரட்டும் - புலி கிடக்கும்   
நெடிய மலையின்கண் பேராந்தையோடு கூடி யொலிக்கும்; மலை 
கெழு நாடன்  கூர்  வேல்  பிட்டன் - மலைபொருந்திய நாட்டை 
யுடையனாகிய கூரிய வேலையுடைய பிட்டனை; குறுகல் ஓம்புமின் 
தெவ்விர் - அணுகுதலைப்  பாதுகாமின்    பகைவீர்; அவனே - 
அவன்தான்; சிறுகண் யானை வெண்கோடு பயந்து ஒளி திகழ் முத்தம்- 
சிறு கண்ணையுடைய யானையினது வெளிய கோடு தரப்பட்ட ஒளி 
விளங்கு முத்தத்தை; விறலியர்க்கு ஈத்து - விறலியருக்குக் கொடுத்து; 
நார்    பிழிக்   கொண்ட    வெங்கள்    தேறல் - நாரைப்
பிழிந்துகொள்ளப்பட்ட விரும்பத்தக்க  கள்ளாகிய தெளிவை;
பண்ணமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி - பண் பொருந்தின
நல்ல யாழினையுடைய பாணர் சுற்றத்தை நுகர்வித்து; நசைவர்க்கு
மென்மை யல்லது - இவ்வாறு தன்பால் பரிசில் நச்சி வந்தோர்க்கு
மெல்லியனா யிருத்தலல்லது; பகைவர்க்கு-; இரும்பு பயன்    படுக்கும்
கருங்கைக்     கொல்லன் - இரும்பைப் பயன்படுத்துகின்ற வலிய
கையையுடைய கொல்லன்; விசைத் தெறி கூடமொடு பொரூஉம் -
விசைத் தடிக்கப்பட்ட கூடத்தோடே யேற்று மாறுபடும்; உலைக் கல்
அன்ன - உலையிடத்து அடைகல் போலும்; வல்லாளன் - வலிய
ஆண்மையை யுடையன் எ-று.

     பிட்டன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்குக் கல்லன்ன
வல்லாளனாதலால், தெவ்வீர், அவனைக் குறுக லோம்புமின் எனக் கூட்டுக.
வலிதுரந் தென்பதற்கு மாற்றார் வலியைக் கெடுத் தெனினுமமையும். நார்
பிழிக் கொண்ட வென்பதற்கு, கோதைப் பிழிந்து கொண்ட வெனினுமமையும்.

     விளக்கம்: மரையா, காட்டுப்பசு; ஒருவகை விலங்கென்பர் உ.வே.
சாமிநாதையர். இது நெல்லிக்காயைத் தின்னுமிடத்து அதன் கொட்டையை
வெளியே துப்பி விடுதலால், “மரையா பிரித்துண்ட நெல்லிப் பரல்”என்றார்.
மனைகளில் நெல்லி மரங்கள் வேலியாக வைக்கப்பட்டுள்ளன. “நெல்லி,
மரையின மாரு முன்றில்”(குறுந். 235) என்று பிறரும் கூறுதல் காண்க.
வேட்டுவரை வில்லுழு  துண்மார்  என்றார்;  வில்லுடைய  மறவரைத்
திருவள்ளுவரும்    “வில்லே ருழவ”ரென்பர். எல்    அடிப்படுத்தல் -
இரவுப்போது முற்றும் வேட்டையாடித் திரிதல்.    துடி மிக்க வன்மையும்
கடிய வோசையு முடையதாகலின் இழி பிறப்பாளன் தன் வலி முழுதும்
செலுத்தி    முழக்குகின்றா  னென்றற்குக் “கருங்கை சிவப்ப, வலிதுரத்து
சிலைக்கும்.....துடி”யென்றார். துடி யொலியும் குடிஞையாகிய பேராந்தையின்
ஒலியும் ஒப்ப எதிரொலிக்கும் என்பார், “குடிஞையோ டிரட்டும்”என்றார்.
யானையின் கோடு மிகவும் முதிர்ந்தவழி அதன் நுனியில் முத்துண்டாமென்ப;
“முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற”(பதிற்.32) என்று சான்றோர் கூறுதல்
காண்க.     நார்     பிழிக்     கொண்ட    வெங்கள் - நாரால்  
வடிகட்டிக் கொள்ளப்பட்ட வெவ்விய கள். வெம்மை, வேண்டற்பொருட்டு.
விறலியர்க்கு முத்தும் பாணர்க்கு வெங்கட்டேறலும் கொடுக்கப்படுகின்றது.
நசைவர், பரிசில் நச்சிவரும் இரவலர். கருங்கை யென்ற விடத்துக் கருமை,
வன்மை உலை கல்,  பட்டடைக்   கல்.  “உலைக்கல்    லன்ன  
வல்லாளன்”எனப் பிட்டங்கொற்றனைக் கூறியது, பகைவரால் தாக்கிக்
கெடுக்க முடியாத அவனது மெய்வண்மை குறித்துநின்றது. நாரென்பதற்குக்
கோது எனப் பொருள்கொண்டு, நார் பிழிக் கொண்ட வென்பதற்குக்
கோதைப் பிழிந்து கொண்டென வுரை கூறினும் பொருந்து மென்றார்.