181. வல்லார் கிழான் பண்ணன் வல்லார் என்பது ஓரூர். இவ்வூர்க்குத் தலைவன் பண்ணன். சிறுகுடி கிழான் பண்ணன்போல இவனும் கைவண்மையும் போர்வண்மையு முடையவன். சிறுகுடி சோழநாட்டு மென்புலத்து ஊராக, இவ்வல்லார் காட்டு நாட்டு வன்புலத் தூராகும். இவ்வூரைச் சுற்றி வலிய அரண் உண்டு. அதனைச் சார்ந்து காவற்காடும் உண்டு. இவ்வூர் மன்றில் விளா மரங்கள் நின்று தழைத்துக் காய்த்துக் கனிந்திருக்கும். அம் மன்றினைச் சார்ந்திருக்கும் மனைகளில் முன்றிலில இவ்விளாவின் கனிகள் உதிரும்; அம் மனைகளின் வாழும் மறத்தியருடைய புதல்வர் விளவின் பழம் உதிருந்தோறும் ஓடிச்சென்றெடுப்பர். அதேகாலத்தில் புறத்தே காவற்காட்டில் வாழும் பிடியானை யீன்ற இளங்கன்று ஓடிவந்து விளவின் உதிர்ந்த கனியை யெடுக்கும் இத்தகைய நலம் சிறந்த ஊராகிய வல்லார் பண்ணனுக் குரியதாகும். இவனைச் சோணாட்டு முகையலூர்ச சிறுகருந்தும்பியா ரென்னும் புலவர் ஒருகால் போந்து இனிய பாட்டுப் பாடிச் சிறப்பிக்க, இவனும் அவர்க்கு வேண்டும் சிறுமையும் விதந்தோதிச் சிறப்புறப் பாடியதுகொண்டு சான்றோர் இவரைச் சிறப்பாகக் கருந்தும்பியார் என அழைப்பாராயினர். அப்பாட்டுக் கிடைத்திலது.
இப்பாட்டின்கண், சிறுகருந்தும்பியார் பாணர்க்குக் கூறும் முறையில் வல்லார் என்னும் ஊரின் அமைதியை யெடுத்தோதி, பாணனே, பண்ணன் வல்லாரென்னும் ஊரின்கண் உள்ளான்; வறுமையால் உண்ணாது வருந்தும் நின் சுற்றம் உண்டு வாழ்தல் வேண்டுவையாயின், வல்லார் கிழானான பண்ணன் பகைப்புலம் நோக்கிச் செல்லுதற்குள்ளே உன் பசிக்குப் பகையாகிய பரிசில் பெறுதற்கு இப்போதே செல்வாயாக என்று கூறுமாற்றால் போரெனிற் புகலும் பண்ணனது ஆண்மையினை விதந்தோதுகின்றார்.
இனி, இத் தொகை நூற்கண்ணுள்ள ஊர்நனி யிறந்த பார்முதிர்பறந்தலை (புறம்.265) என்று தொடங்கும் கையறுநிலைப் பாட்டு இப்பண்ணன் கரந்தைப் போரிற்பட்டு நடுகல்லில் நின்ற நிலையைக் குறிக்கின்றது. அதனைப் பின்னர்க் காணலம். | மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் கருங்க ணெயிற்றி காதன் மகனொடு கான விரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும் புடுத்த வன்புல விருக்கைப் | 5 | புலாஅ வம்பிற் போரருங் கடிமிளை | | வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன் உண்ணா வறுங்கடும் புய்தல் வேண்டின் இன்னே சென்மதி நீயே சென்றவன் பகைப்புலம் படரா வளவைநின் | 10 | பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. (181) |
திணையும் துறையு மவை. வல்லார்கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் பாடியது. உரை: மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் - மன்றத்தின் கண்ணே நிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்த விளாம்பழத்தை; கருங் கண் எயிற்றி காதல் மகனொடு - கரிய கண்ணை யுடைய மறத்தி காதல் மகனுடனே; கான இரும் பிடி கன்று தலைக் கொள்ளும் - காட்டு வாழும் கரிய பிடியினது கன்று வந்தெடுக்கும்; பெருங் குறும்பு உடுத்த வன்புல இருக்கை - பெரிய அரண் சூழ்ந்த வலிய நிலத்தின்கண் ஊராகிய இருப்பையும்; புலாஅல் அம்பின் - புலால் நாறும் அம்பினையும்; போர் அருங்கடிமிளை - பொருதற்கரிய காவற்காட்டினையு முடைய; வலாஅ ரோன் - வல்லாரென்கிற ஊரிடத்தான்; வாய் வாள் பண்ணன் - வாய்த்த வாளையுடைய பண்ணன் ; உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின் - நினது உண்ணப்பெறாத வறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்; நீ இன்னே சென்மதி - நீ இப்பொழுதே செல்வாயாக; சென்று அவன் பகைப்புலம் படரா அளவை - போய் அவன் வேற்றுப்புலத்துச் செல்லாத எல்லையில்; நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கு - நினது பசிக்குப் பகையாகிய பரிசிலை நினது வறுமையைக் காட்டினையாய்க் கொள்ளுதற்கு எ-று.
அம்பிற் போரருங் கடிமிளை என்பதற்கு, அம்பாற் பொருதற்கரிய கடிமிளை யெனினு மமையும். காட்டிப் பரிசில் கொள்ளுதற்கு இன்னே சென்மதி யெனக் கூட்டுக. மதி: முன்னிலை விளக்கும் அசை.
விளக்கம்: மறவர் மனை மன்றத்தின் அருகே அதனைச் சார இருத்தலின், மன்றத்தில் நிற்கும் விளாமரத்தின் பழம் மனையின் முன்றிலில் விழுகிறதென்றார். பிடியானை கடிமிளையில் வாழ்வதென்றும், மறவர் இருக்கை புறஞ்சேரி யென்றும் கொள்க. அதனை யடுத்திருப்பது அகழும் அரணுமாதலின், இரண்டு மகப்பட பெருங்குறும்புஎன்றார் கடிமிளையும் ஆழ் கிடங்கும் உயர் மதிலும் அம்புடை யெயிலும் என அரண்களை வகுத்துரைக்கும் இயைபுகொண்டு, இவ்வாறு கூறப்பட்டது. கடிமிளைக் குண்டு கிடங்கி, னெடுமதில் நிரை ஞாயில் அம்புடையா ரெயில்(பதிற். 20) எனப் பிறரும் கூறுதல் காண்க. புலால் நாறும் அம்பினையும், வாய் வாளையுமுடைய பண்ணனென்றும், இருக்கையையும் கடிமிளையையு முடைய வலாரென்றும் இயைப்பது நேரிது. |