71. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

     பூதப்பாண்டியன், பாண்டியர்க்குரிய ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து
வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனச்
சிறப்பிக்கப்பட்டான். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளாவாள்.
இருவரும் நல்லிசைப் புலமையும் ஒருவரையொருவர் இன்றியமையாக்
காதலன்பும் உடையர். இப்பாண்டியற்குத் திதியன் என்பான் இனிய நண்பன்.
அவன் பொதியின் மலையைச் சார்ந்த நாட்டுக்குரியவன். அவன் இன்னிசை
நல்கும் இயம் இயம்புவதில் வல்லுநன்; விற்போரிலும் விறல் படைத்தவன்.
ஒருகால், இப் பாண்டியற்கும் ஏனைச் சேர சோழ வேந்தர்கட்கும் பகைமை
யுண்டாயிற்று. அதுகாரணமாக, அவ்விருவரும் ஒருங்குகூடி இவனோடு
பொருதற்கு வந்தனர். அதனை அறிந்ததும், மிக்க சினமுற்று இவன் கூறிய
வஞ்சினமே இப் பாட்டாகும்.“வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும்
என்ப” எனத் தான் கேள்வியுற்று கூறி,அவரை அமரின்கண் அலறத் தாக்கிப்
புறங்காணேனாயின், இதோ என்னருகிருக்கும் “சிறந்த பேரமருண்கண்
இவளினும் பிரிக” என்றும், மறுபிறப்பில் தென்புலங் காக்கும் சிறப்பிழந்து
பிறர் வன்புலம் காக்கும் காவலர் குடியில் பிறப்பேனாக என்றும் இவன்
கூறும் வஞ்சினம் மிக்க நயமுடையதாகும். மாவன், ஆந்தை, அந்துவஞ்
சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலியோர் இவனுக்குக் கண்போன்ற
நண்பராவர். இப் போரில் இவன் இறந்துபட்டான். இவன் மனைவியாகிய
பெருங்கோப் பெண்டு சான்றோர் விலக்கவும் விலகாது கைம்மை நோன்பின்
கடுமையை விளக்கித் தீப்பாய்ந்தாள். அக்காலை, அவள் பாடிய பாட்டும்
இந்நூற்கண் உள்ளது.

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
5. டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
அறநிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
10.வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசால்
அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
15.கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ
மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. (71)

     திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த
பூதப்பாண்டியன் பாட்டு.

     உரை: மடங்கலிற் சினைஇ - சிங்கம் போலச் சினந்து; மடங்கா
உள்ளத்து அடங்காத் தானை வேந்தர் - மீளாத மேற்கோள்
பொருந்திய உள்ளத்தினையும் மிகைத்துச் செல்லும் படையையுமுடைய
வேந்தர்; உடங்கு இயைந்து - தம்மில் ஒப்பக் கூடி; என்னொடு
பொருதும் என்ப - என்னொடு பொருவேமென்று சொல்லுவர்; அவரை
ஆர் அமர் அலறத் தாக்கி - அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய
போரின்கண்ணே அலறப் பொருது; தேரொடு அவர்ப்புறம்
காணேனாயின் - தேவருடனே அவருடைந் தோடும் புறக்கொடையைக்
கண்டிலேனாயின்; சிறந்த பேரமர் உண்கண் இவனினும் பிரிக -
எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட
கண்ணியையுடைய இவளினும் நீங்குவேனாக; அறன் நிலை திரியா
அன்பின் - அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய; அவையத்து
- அவைக்களத்து; திறனில் ஒருவனை நாட்டி - அறத்தின்
திறப்பாடில்லாத ஒருவனை வைத்து; முறை திரிந்து மெலிகோல்
செய்தே னாகுக - முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தே னாகுக;
மலி புகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் - மிக்க
புகழையுடைய வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்;
பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் - பொய்யாத புது
வருவாயையுடைய மைய லென்னும் ஊர்க்குத் தலைவனான மாவனும்;
மன் னெயில் ஆந்தையும் - நிலைபெற்ற எயிலென்னு மூரையுடைய
ஆந்தையும்; உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும் -
புகழமைந்த அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும்; வெஞ்சின இயக்கனும்-
வெய்ய சினத்தையுடைய இயக்கனு மென; உளப்படப் பிறரும் -
இவருட்படப் பிறரும்; கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த - எனது
காண்போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய; இன் களி மகிழ்
நகை இழுக்கியான் - இனிய செருக்கையுடைய மகிழ்நகையைத்
தப்பியவனாகி; மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த - பல வுயிரையும்
பாதுகாக்கும் அசரர் குலத்திற் சிறந்த; தென்புலம் காக்கும் காவலின்
ஒரீஇ - பாண்டி நாடு காக்கும் காவலின் நீங்கி; பிறர் வன் புலங்
காவலின் மாறி - பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவற்கண்ணே
இக் குடிப்பிறப்பின் நீங்கி; யான் பிறக்கு - யான் பிறப்போனாக எ-று.

     மெலிகோல் செய்தே னாகுக வென்பதனுள், ஆகுக வென்பது எங்குந்
தந்துரைக்கப்பட்டது. ஒன்றோ வென்பது எண்ணின்கண் வருவதோர்
இடைச்சொல்; அதனை முன்னும் பின்னும் கூட்டுக.

     விளக்கம்: மடங்கா வுள்ளத் தடங்காத் தானை: தொடங்கின் இடையில்
மடங்குதல் ஊக்கமுடைய தானை வீரர்க்கு ஆகாமையாலும் தொகை
மிகுதியால் அடங்கி நிற்றல் அமையாமையாலும் இவ்வாறு கூறினார். அறன்
நிலை திரிய அன்பு; அறத்திற்கே அன்பு சார்பென்ப வாதலால், அறம்
நிலைகலங்காமைக்கு அன்பு இன்றியமையாததாயிற்று. கண்ணன் நண்பரொடு
கூடிக் களித்தலை விட்டு வேறுபடும் குறிப்பு, கெடுவது காட்டும் குறியாதலால்,
“கேளிரொடு கலந்த இன்களி மகிழ் நகை இழுக்கியான்” என்று
எடுத்தோதினான். மாறுதல், ஈண்டுப் பிறப்பு மாறுதல்; “இம்மை மாறி மறுமை
யாயினும்” குறுந்.49) என்றாற் போல. பிறக்கு; செய்யென்னும்
வாய்பாட்டுத்தன்மை வினைமுற்று. இப் பாட்டின்கண், தென்புலங் காக்கும்
பாண்டியர் குடிப்பிறப்பின் உயர்வு குறித்துரைக்கப் படுவது நோக்கத்தக்கது.
இவ்வாறே, “மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது”
(சிலப்.20: 76-7) என வருவதும் ஒப்புநோக்கத்தக்கது.