25. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

     இப் பாண்டிவேந்தனை ஆசிரியர் கல்லாடனார், இப்பாட்டின்கண்,
இவன் தன்னொடு  பகைத்த வேந்தர்   இருவரைப்  பொருதழித்து
அவருடன் துணைவந்த பிறரையும் வென்று மேம்பட்ட   திறத்தை அப்
பகைவரிறந் தமையான் அவருடைய   மகளிர்   கூந்தல்   களைந்து
கைம்மை மேற்கொள்ளும் செயலைக் கூறிச் சிறப்பிக்கின்றார்.

 மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
 5. குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை
 அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணிப்
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
 10. முலைபொலி யாக முருப்ப நூறி
 மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர

அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே. (25)

     திணை: வாகை; துறை: அரசவாகை; அவனைக்  கல்லாடனார் 
பாடியது.

     உரை : மீன்   திகழ்   விசும்பின்  -  மீன்    விளங்கும்
வானத்தின்கண்; பாய் இருள்  அகல - பரந்த இருள் நீங்க; ஈண்டு
செலல் மரபின்-ஓங்கிச் செல்லுதன் முறைமையையுடைய; தன் இயல்
வழா அது - தனது தன்மையிற் பிழையாது; உரவுச் சினம் திருகிய
உரு கெழு ஞாயிறு - வலிய வெம்மை முறுகிய உட்குப் பொருந்திய
ஞாயிறு; நிலவுத் திகழ்மதியமொடு - நிலா விளங்கும் திங்களுடைய;
நிலம் சேர்ந்தா அங்கு - நிலத்தைப் பொருந்தினாற்போல; உடலருந்
துப்பின் ஒன்று மொழி வேந்தரை - பகைத்தற்கரிய வலியையுடைய
வஞ்சினங் கூறிய  இரு  வேந்தரை;   அணங்கரும்   பறந்தலை -
வருத்துதற்கரிய  போர்க்களத்தின்  கண்ணே; உணங்கப் பண்ணி -
மாயப் பொருது; பிணியுறு முரசம் கொண்ட காலை -  அவருடைய
வாராற் பிணிப்புற்று முரசத்தைக் கொண்ட காலத்து; நிலை திரிபு
எறிய  - நின்ற  நிலையிலே நின்று - நின்னைச் சூழ்ந்துகொண்ட
வீரரைப்  புரிந்து  எறிதலால்;  திண்  மடை கலங்கிச்  சிதைதல்
உய்ந்தன்று - திண்ணிய கொளுத்துக் கலங்கிக் கெடுதல் பிழைத்தது;
நின் வேல் - நினது வேல்; செழிய-; முலை பொலி ஆகம் உருப்ப
நூறி - முலை பொலிந்த மார்பம்  அழல்  அறைந்து   கொண்டு;
மெய்ம் மறந்து  பட்டவரையாப்  பூசல்  - அறிவு  மயங்கி உற்ற
அளவற்ற  அழுகை  யாரவாரத்தையுடைய;   ஒண்ணுதல்  மகளிர்
கைம்மை கூர - ஒண்ணுதல்  மகளிர் கைம்மை நோன்பிலே மிக;
அவிர் அறல் கடுக்கும் - விளங்கும் அறலை யொக்கும்; அம்மென்
குவை இருங் கூந்தல் - அழகிய மெல்லிய குவிந்த கரிய மயிரினை;
கொய்தல் கண்டு - கொய்த பரிசைக் கண்டு எ-று.

     செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதலுய்ந்த
தெனக்  கூட்டுக.  ஈண்டுச்  செலல்  மரபெனவும்,  ஐம்பாற் குவை யிருங்
கூந்தலெனவும்   பாடமோதுவாரு  முளர். உய்ந்தன்றோ; ஓ: அசை நிலை."

விளக்கம்: ஞாயிறு மதியமொடு நிலஞ் சேர்ந்தது போல, பெருவேந்தர்
இருவர்  போரிற்   பட்டனர்: அவர் சேரனும் சோழனுமாவர். உடலுதல் -
பொருதல்;   இதற்குக்   காரணம்     பகையாதலின்,    உடலருந்துப்பு,
பகைத்தற்கரிய   வலியாயிற்று.   போர்க்களத்துப்    பொரும்    வீரர்
உயிரிழத்தற்கும் புண்ணுற்று வருந்துதற்கும் அஞ்சாராதலின், போர்க்களம்,
“அணங்கரும் பறந்தலை”   யெனப்பட்டது. மடை வேலினது மூட்டுவாய்.
வேலினுடைய இலையும் எறி   பிடியும்   ஆசிடை  மடுத்துக் காய்ச்சிப்
பற்றவைக்கப் படுதல்பற்றி,   மடை யென்றாராக,   உரைகாரர் அதனைக்
“கொளுத்து” என்றார்.  மெய்ம்மறத்தற்கு  ஏது அறிவுமயக்கமாதலால்,
மெய்ம்மறந்தென்றதற்கு அறிவு மயங்கி என வுரைத்தார். மகளிர் கூந்தல்
களைவது காணாவழி, வேல்கொண்டு தாக்குதலால், அவ்வேல் ஆற்றாது
மடைசிதைந்து கெடுமெனப் போரின் கடுமை யுடைத்தாராயிற்று. இதனால்
கணவனை யிழந்த மகளிர் தம் கூந்தலைக் கொய்து கொள்ளும் வழக்குப்
பண்டைத் தமிழ் வழக்காதல் துணியப்படும்.