75. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான். வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின் இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக் கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண் வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, அரசு முறை மூத்தோர்க்குப் பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின், அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம் என்றான். இங்ஙனம் சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான். | மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பாறர வந்த பழவிறற் றாயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் | 5 | சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் | 10 | நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75) |
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி பாட்டு.
உரை: மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென - தம் குடியில் முதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக; பால் தர வந்த பழ விறல் தாயம் - விதி தரப்பட்டுத் தம்பால் வந்த பழைய வெற்றியாலுண்டாகிய அரசுரிமையை; எய்தின மாயின் - பெற்றே மானால்; சிறப்பு எய்தின மென - இத் தலைமையைப் பெற்றே மெனக் கொண்டு; குடி புரவு இரக்கும் - தம் குடி மக்களை இறைவேண்டி யிரக்கும்; கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் - மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ்சிறியோன் பெறின்; அது சிறந்தன்று மன் - அத்தாயம் அவனுக்குப் பரிக்க வொண்ணாதாம் படி கனத்தது மிகவும்; மண்டமர் பரிக்கும் மதனுடை நோன்றாள் - அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியை யுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய; விழுமியோன் பெறுகுவ னாயின் - சீரியோன் பெறுவனாயின்; ஆழ் நீர் அறு கய மருங்கில் - தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்து; சிறு கோல் வெண் கிடை - சிறிய தண்டாகிய வெளி கிடேச்சினது; என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்து - கோடைக் கண் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும் நொய்து; மையற்று - குற்றமற்று; விசும்புற ஓங்கிய வெண் குடை - விண்ணின் கண்ணே பொருந்த வுயர்ந்த வெண் குடையினையும்; முரசு கெழு வேந்தர் அரசு கெழு திரு- முரசினையுடைய அரசரது அரசாட்சியைப் பொருந்திய செல்வம் எ-று.
குடிபுர விரக்கு மென்பது குடிமக்களைக் கொள்ளுங் கடமையன்றி மிகத் தரவேண்டு மென்று இரத்தலை. தாயம் சிறியோன் பெறின், அது மிகவும் சிறந்ததன்று; வேந்தர் அரசு கெழு திரு விழுமியோன் பெறுகுவனாயின் நன்றும் நொய்தா லெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன், ஆக்கத்தின்கண் வந்தது. அம்ம: அசைநிலை.
விளக்கம்: தந்தை மூத்துக் கழிந்தவழி அவன்வழித் தோன்றும் அரசு முறையெனும் தாய முறையை ஈண்டுப் பழவிறல் தாயம் என்றும், மூத்தோர் இறந்த பின்னே வரும் உரிமையுடைத் தென்றற்கு மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென என்றும் கூறினான். உரிய கடமையைக் குடிமக்கள் தாமே நல்குவராதலின், கையிகந்த கடமை வாங்கும் வேந்தன் செயலைக் குடிபுரவு இரக்கும் சிறியோன் என்றான். குடி புரவு - குடிமக்களைப் புரத்தற் பொருட்டுப் பெறும் கடமை. மிக்க ஆண்மையே வேந்தற்கு வேண்டப் படுதலின், அஃதில்லாதானைக் கூரிலாண்மைச் சிறியோன் என்றான். மதன் - மன வெழுச்சி. கிடை - கிடேச்சு; அஃதாவது நெட்டி. என்றூழ் - வெயில். சிறந்தன்று - மிகுதிப் பொருட்டாய், கனம் மிகுந்தது என நின்றது. மன் னென்றது ஆகும் என ஆக்கப் பொருள் தருதலின், ஆக்கம் என்றார். |