79. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்

     தலையாலங்கானத்துச் செருவின்கண் பாண்டியன் நெடுஞ்செழிய னுடைய
வீரர்கள், பகைவர் படையை யழித்து வருகையில், பகற்போது கழியலுற்றது.
ஞாயிறு மறைதற்குச் சில நாழிகைக்கு முன்பே செழியன் செருக்களம் நோக்கி
வந்தான். வந்தவன், காலைப்போதில் மூதூரிலுள்ள கயத்தில் மூழ்கி நீராடி
வேம்பின் மாலை சூடிப் போர்க்குத் தெண்கிணை முன்பாகக் கறங்கிச் செல்ல,
பின்னே பெரும் களிறொன்று நடந்து வருவது போலப் பெருமிதத்துடன்
போர்க்களத்திற்கு வந்தான். பொர நிற்கும் வீரரும் பலராயிருந்தனர். இக்
காட்சியைக் கண்ட இடைக்குன்றூர் கிழார் “பகற்போது மிகக் குறைவாக வுளதே;
இவரனைவரும் படாது ஒருசிலர் உயிர் தப்புவர் போலும்” எனத் தம்முள் நினைந்து
இப்பாட்டினைப் பாடியுள்ளார்.

மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி
மன்ற வேம்பி னொண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி
வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த
5. வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே. (79)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி - தனது பழைய
நகரிவாயிற்கண் குளிர்ந்த பொய்கையின் கண்ணே மூழ்கி; மன்ற
வேம்பின் ஒண் குழை மலைந்து - மன்றத்திடத்து வேம்பினது ஒள்ளிய
தளிரைச் சூடி; தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி - தெளிந்த
ஓசையையுடைய பறை முன்னாகக் களிறு போலப் பெருமிதத்தோடு
நடந்து; வெம் போர்ச் செழியனும் வந்தனன் - வெய்ய போரையுடைய
நெடுஞ்செழியனும் வந்தான்; எதிர்ந்த வம்ப மள்ளர் பலர் - அவனோடு
பகைத்த நிலையில்லாத மறவர் தாம் பலர்; பகல் தவச் சிறிது -
பகற்பொழுது மிகச் சிறிதாதலால்; எஞ்சுவர்கொல் - அவருட் சிலர்
படா தொழியவுங் கூடும் எ-று.


     போர் மடந்தையைப் புணர வருகின்ற கன்னிப்போ ராதலால், “பனிக்கய
மண்ணி” யென்றார். கிணை முன்னர் வருதல், யானைக்கும் இவனுக்கும் ஒக்கும்.

     விளக்கம் : கயம் மண்ணி - நீர்நிலையின்கண் மூழ்கி நீராடி; “மண்ணிய
சென்ற வொண்ணுத லரிவை” (குறுந் 292) என்றாற்போல. போர்ப்பறை
கறங்கிக்கொண்டு முன்னே செல்லப் போர்க்களிறு பின்னே செல்வது போல,
செழியனும் போர்ப்பறை கறங்கி முன்னே செல்லத் தான் பின்னே சென்றான்
என்றறிக. பகல் மறையுமுன் ஒரு வீரரும் எஞ்சாமற் பொர வேண்டுமென்பது
அவன் மொழிந்த வஞ்சின மாகலின், “எஞ்சுவர் கொல்லோ” என்றார்;
என்றாராயினும், பகற்போது முடிவதற்கு முன்பே பகை வீரர் அனைவரும்
எஞ்சாமற் பட்டனர் என அறிக. அரசு கட்டிலேறிய பின் முதன் முதலாகச்
செய்யும் போராதலால், இது கன்னிப்போரெனப்பட்டது.