10. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி

     நெய்தலங்கானல் என்பது  இச்  சோழன்   பிறந்த   வூராகும்.
“நெய்தலங்கானல் நெடியோய்”என்று ஊன்பொதி பசுங்குடையார் கூறுவர்.
இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ்
மேம்பட்டவன்.  இரப்போர்க்கு வரையாது வழங்கும் வண்மையுடையவன்.
இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி யென்னுமிடத்தும் பகைவரை
வென்று  முறையே  பாமுளூரெறிந்த  இளஞ்சேட்   சென்னி   யென்றும்
செருப்பாழி  யெறிந்த  இளஞ்சேட்  சென்னியென்றும்  கூறப்படுகின்றான்.
பாமுளூர்  சேரர்கட்  குரியது.  இவன் நெய்தலங் கானலிலிருந்த போதும்,
பாமுளூரெறிந்தபோதும்,   செருப்பாழி   யெறிந்தபோதும்    ஊன்பொதி
பசுங்குடையார் இவனைப்பாடி பரிசில்  பெற்றிருக்கின்றார்  ஊன்  பொதி
பசுங்குடையாரது இயற்பெயர் தெரிந்திலது.  பனையினது  பச்சோலையால்
உட்குடைவுடையதாகச்  செய்யப்படுவது   பனங்குடை   உணவுண்டற்கும்
பூப்பறித்தற்கும்   மக்கள்   பயன்படுத்துவர்;   “எய்ம்மான்   எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள்ளமலை, இரும்பனங் குடையின் மிசையும்”
(புறம்.177)  என்றும்,  “அவல்  வகுத்த  பசுங்குடையாற் , புதல் முல்லைப்
பூப்பறிக் குந்து”  (புறம்.352)   என்றும்   சான்றோர்   கூறுதல்  காண்க.
வேண்டுமாயின்  இதனிடத்தே  சோறு பொதிந்துகொண்டும் போவது மரபு;
“ஆறு சென்மாக்கள் சோறுபொதி  வெண்குடை” (அகம்.121) என வருவது
காண்க. இதனிடத்தே ஊன்  பொதிந்துகொண்டு  செல்வதை வியந்து, இவ்
வாசிரியர், “ஊன்பொதி  பசுங்குடை”  யென்று  பாடிய  சிறப்பால்,  இவர்
“ஊன்  பொது  பசுங்   குடையார்”  எனப்படுகின்றார்.  இவர்  பாட்டில்
நகைச்சுவையும்,  இயற்கை  நவிற்சியும்,  அறவுணர்வும்  விரவி   இவரது
பருமாண்புலமை நலத்தைப் புலப்படுத்தி  நிற்கின்றன. 

      இப் பாட்டின்கண்,   இளஞ்சேட்சென்னி   நெய்தலங்கானலிடத்தே
யிருக்குங்கால்  தன்னை  வழிபடுவோரைத்  தழுவிக்கோடலும், பிறர் பழி
மேற்கொள்ளாமையும், குற்றஞ்செய்தாரை நன்காராய்ந்து ஒறுத்தலும்,
அடியடைந்தாரை ஏற்றலும், மனைவாழ்வில் இன்புறுதலும் உடையனாய்,
முன்செய்து பின்னிரங்காவினையும் நாடு முழுதும் பரந்த நல்லிசையும்
கொண்டு சிறப்பது கண்டு மகிழ்ந்து புகழ்கின்றார்.

 வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
 5.வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற்
 றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மன்னர்
 10. மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
  செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. (10)

     திணையும்  துறையும் அவை. சோழன் நெய்தலங்கானல்
இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

     உரை:வழிபடுவோரை வல் அறிதி - நின்னை வழிபட்டொழுகு
வோரை விரைய அறிவை; பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை -
பிறருடைய குற்றம் சொல்லுவாரது வார்த்தையைத் தெளியாய்; நீ
மெய்கண்ட தீமை - நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து
அறுதியிடப்பட்ட கொடுமையை; காணின் - ஒருவன்பாற் காணின்;
ஒப்ப நாடி - அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து; அத் தக ஒறுத்தி
- அத் தீமைக்குத் தகத் தண்டம் செய்வை; வந்து அடி பொருந்தி -
வந்து நின் பாதத்தையடைந்து; முந்தை நிற்பின் முன்னே
நிற்பாராயின்;பண்டையிற் பெரிது நீ தண்டமும் தணிதி - அவர்
பிழை செய்வதற்குமுன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக
அவரைச் செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்து அட்டு -
அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்று; ஆனா - உண்ணவுண்ண
வமையாத; கமழ் குய் யடிசில் - மணங்கமழும் தாளிப்பையுடைய
அடிசிலை; வருநர்க்கு வரையா - விருந்தினர்க்கு மிகுதி
குறைபடாமல் வழங்கும்; வசையில் வாழ்க்கை -பழி தீர்ந்த மனை
வாழ்க்கையையுடைய;மகளிர் மலைத்தல் அல்லது - பெண்டிர்
முயக்கத்தால்மாறுபடுத்தலல்லது; மள்ளர்
மலைத்தல் போகிய வீரர்
போரான் மாறுபடுத்தலொழிந்த;சிலைத்தார் மார்ப - இந்திர
விற்போலும்   மாலையையுடைய  மார்ப;  செய்து இரங்கா வினை
- ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தே மென்று
கருதாத செய்கையையும்; சேண் விளங்கும் புகழ்-சேய்மைக்
கண்ணே  விளங்கும்   புகழினையுமுடைய;    நெய்தலங்   கானல்
நெடியோய் - நெய்தலங்  கானலென்னும்  ஊரையுடைய நெடியோய்;
எய்த வந்தனம் யாம் - அணுக வந்தேம் யாம்; பல ஏத்துகம் - நின்
பல குணங்களையும் புகழ்வேமாக எ-று.

      வழிபடுவோரை வல்லறிதி யென்றது, அறிந்து அவர்களுக்கு அருள்
செய்வை யென்பதாம். பெரிதென்பது  வினையெச்சக் குறிப்பாதலின், ஆக
வென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது  பண்டையிற்  பெரிது தணிதி
யென்றுரைப்பினு   மமையும்.  அடப்பட்டமையாத  அமிழ்து  போலும்
அடிசிலென்றுரைப்பினு   மமையும்.  வினையும்   புகழும்   உடைய
நெய்தலங்கானல் நெடியோய், பல வேத்துவேமாக எய்த வந்தன மெனக்
கூட்டுக.

     விளக்கம்: வினையும் புகழுமுடைய நெய்தலங்கானல் நெடியோய்,
மார்ப, நீ,   வல்லறிதி, மொழிதேறலை,   தகவொறுத்தி.   தண்டமும்
தணிதி,ஏத்துவேமாக, எய்த வந்தனம்  எனக்   கூட்டி   வினைமுடிவு
செய்க.   தன்னை  வழிபட்டொழுகுபவரை  அவர் சொல் செயல்களைக்
கண்டறிதற்கு முன்னே அவர் முகக்குறிப்பால்  மனநிலையைக் கண்ட
மாத்திரையே  யுணர்ந்து கொள்ளுதல்பற்றி, “வல்லறிதி” என்றார்.அறிதியே
யென்பது அறிதீயே யெனச்  செய்யுளாதலின்  விகாரமாயிற்று.  அறிதிலின்
பயன்  செயலால்வெளிப்படுதல்பற்றி,  “அறிதி   யென்றது   அறிந்து
அவர்களுக்கு  அருள் செய்வை யென்பதாம்”  என்றார். குற்றமென்பது
பழிக்கப்படுவதொன்றாதலால்  பழியெனப்பட்டது.   “நீதிநூற்குத்  தக
ஆராய்ந்து”  என்பதனால்,  குற்ற வகைகளும்   அவற்றை  யாராயுந்
திறங்களும்   ஒறுக்கும்  திறங்களும்  உணர்த்தும்  நீதி   நூல்கள்
தமிழகத்தே யிருந்தமை புலனாகிறது.பொருணூலை வடமொழியில் எழுதிய
கௌடிலியன் தென்றமிழ் நாட்டவனாதலால் அவனது நூலில் காணப்படும்
நீதிகள் பல தமிழகத்தே    நிலவினவாம்       என்பதும்      ஈண்டு
நினைவுகூரத்தக்கது.   குறிப்பு   வினையெச்சம்  பொருள் முடிவின்கண்
ஆக்கச்சொல்  பெற்று  முடிதல்  வேண்டுமென்பது  இலக்கணமாதலால்
(சொல்.எச்ச. 36) “ஆகவென ஒருசொல் வருவித்துரைக்கப்பட்ட” தென்றார்.
ஒரு சொல் லென்றது ஆக்கச் சொல்லையென வறிக. தணிதியென்றதனால்
தணிதற்குரிய  வெகுளியை  வருவித்து,  “பண்டு  செய்த  கோபத்தினும்
பெரிதாகத் தணிதி” யென்று பொருள் கூறினும் பொருந்துவதாம் என்பார்,
“பண்டு-அமையும்” என்றார். அதிழ்து அட்டு என்புழி, அடுதல்-சுவையால்
வெல்லுதல். அவ்வாறன்றி, அட்டென்றதை உவமப்பொருளதாகக் கொண்டு
“அமிழ்து போலும்  அடிசில்”  என்றும்  பொருள்  கூறலாம்  என்றார்.
“வருநர்க்கு  வரையா”  என்றதற்கு  வரும்  விருந்தினர்க்கு வரையாமல்
வழங்கி யென்று பொருள்  கூறுகின்றாராதலால், அவ்வாறு வழங்கப்படும்
அடிசிலின்  அளவை  வருவித்து,  “மிகுதி   குறையாமல்”   என்றார்.
விருந்தோம்பாமை மனை   வாழ்க்கைக்கு  வசையாமாதலால்,  விருந்து
வரையாத    வாழ்க்கை,    “வசையில்   வாழ்க்கை”   யெனப்பட்டது.
வாழ்க்கையையுடைய மகளிர் என்க;
மனைவாழும்  மகளிர்க்கு   விருந்து
புறந்தருதல் மாண்பாதலை. “கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்,
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்,  விருந்துபுறந்  தருதலும்
சுற்றமோம்பலும்,  பிறவு   மன்ன கிழவோள் மாண்புகள்” (கற்பு.11)  என
ஆசிரியர்   ஓதுவது  காண்க. மகளிர்பால்  மென்மையும்,  பகைவர்பால்
வன்மையும் காட்டும் அவனது இயல்பை,  “மகளிர்  மலைத்தல்  அல்லது
மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப”என்றார்;“வணங்குசிலை
பொருத நின் மணங்கமழகலம், மகளிர்க் கல்லது மலைப்பறி யலையே”
(பதிற்.63) என்று பிறரும் கூறுதல் காண்க. “செய்திரங்காவினை”
யென்பதற்கு  “முன்னொரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தேம்
என்று  கருதாத  செய்கை”  யென்று பொருள்  கூறியது  “செய்து
பின்னிரங்காவினை” (அகம்.268) என்றும், “எற்றென் றிரங்குவசெய்யற்க”
(குறள்.655) என்றும் சான்றோர் கூறியதை யுட்கொண்டென  வறிக.  இங்கே
கூறிய நற்பண்புடையோரை யணுகிக் காண்பதுவும் அவர் குணங்கள்
உரைப்பதுவும் நலமென்பதுபற்றி, “எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே”
என்றார்.