38. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளவளவன் ஒருகால் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார், இக் கிள்ளி வளவனைக் காண வந்தாராக, நீவிர் எந் நாட்டீர்? எம்மை நினைத்தலுண்டோ? என்று வினவினான்;அவற்கு, வேந்தே, நீ சினந்து நோக்குமிடம் தீப்பரவும்; அருளி நோக்குமிடம் பொன் பொலியும்; நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலுடைய; யாம் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்தோம்; நின்னளவு எம்மால் நினைக்கும் அளவிற்றன்று; பரிசிலர் நின் பகைவர் நாட்டில் இருப்பினும், நின் நாட்டையே நினைப்பர் என்று பாராட்டிப் பாடிய பாட்டு இது. ஆசிரியர் ஆவூர் மூலங் கிழார் ஆவூர் மூலம் என்னும் ஊரினர். சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயணையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும் பாராட்டிப் பாடியுள்ளார். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஒருகால் பரிசில் தர நீட்டித்தானாக, சினமுற்ற இவர், இரப்போரை வருத்துதலும் புகழ் குறைபட வரும் செய்கையும் சேய்மையிற் காணாது ஈண்டே கண்டனம்; நின் புதல்வர் நோயிலராக; யான் செல்வேன் என்பது இவரது புலமை சான்ற மனத்திட்பத்தை யுணர்த்தும். இவர் பாடிய கரந்தைப் பாண் பாட்டும் தானை மறமும் மிக்க இன்பந் தருவனவாகும். | வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே | 5. | நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ | | நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் | 10. | நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த | | எம்மள வெவனோ மற்றே யின்னிலைப் பொலம்பூங் காவி னன்னாட் டோரும் செய்வினை மருங்கி னெய்த லல்லதை உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும் | 15. | கடவ தன்மையிற் கையற வுடைத்தென | | ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் நின்னா டுள்ளுவர் பரிசிலர் ஒன்னார் தேஎத்துநின்னுடைத் தெனவே. (38) |
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவன், எம்முள்ளீர் எந் நாட்டீர் என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: வரை புரையும் மழ களிற்றின் மிசை - மலையை யொக்கும் இளங் களிற்றின் மேல்; வான் துடைக்கும் வகைய போல -ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டையுடையனபோல; விர வுருவின கொடி நுடங்கும் - விரவின பல நிறத்தையுடையனவாகிய கொடிகள் அசைந்து தோன்றும்; வியன் தானை விறல் வேந்தே - பரந்த படையையுடைய விறல் வேந்தே; நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ - நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க; நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப - நீ அருளிப் பார்க்குமிடம் பொன் பொலிய; செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் - செஞ்ஞாயிற்றின்கண்ணே நிலவுண்டாக வேண்டினும்; வெண்டிலங்களுள் வெயில் வேண்டினும் - வெளிய திங்களின் கண்ணே வெயிலுண்டாக வேண்டினும்; வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் - நீ வேண்டிய பொருளை யுண்டாக்கும் வலியை யுடையை யாகலின்; நின் நிழல் பிறந்து - நினது நிழற்கண்ணே பிறந்து; நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ - நினது நிழற் கண்ணே வளர்ந்த எமது நினைவெல்லை சொல்ல வேண்டுமோ வேண்டா வன்றே; இன்னிலைப் பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் - இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும்; செய் வினை மருங்கின் எய்த லல்லதை - தாம் செய்த நல்வினையாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவ தல்லது; உடையோர் ஈதலும் - செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும்; இல்லோர் இரத்தலும்-வறியோர் செல்வமுடையோர்பாற் சென்றிரத்தலும்; கடவ தன்மையின் - ஆண்டுச் செய்யக்கடவ தல்லாமையான்; கையற வுடைத்தென - அது செயலற வுடைத்தெனக் கருதி; ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் - அவ்விடத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கூடுதலான்; நின் நாடு உள்ளுவர் பரிசிலர் - நின்னாட்டை நினைப்பர் பரிசிலர்; ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தென - பகைவர் தேயத்திருந்தும் நின்னாடு நின்னை யுடைத்தென்று கருதி யாதலால் எ-று.
மற்று: அசை. வேந்தே,நீ வேண்டியது விளைக்கும்ஆற்றலையாகலின், விண்ணுலகத்து நுகர்ச்சி ஈண்டும் கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும் பரிசிலர் நின்னாடு நின்னை யுடைத்தென்று நின்னாட்டை யுள்ளுவர்; ஆதலான், நின்னிழற் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம்மளவு எவனோவென மாறிக் கூட்டுக.
விளக்கம்: வேந்தன் அருளி நோக்குமிடம் அவன் தானையால் அழிவுறாது ஆக்கமெய்தும் ஆதரவு பெற்றுப் பொன்னும் பொருளும் சிறக்கவுண்டா மென்றற்குப் பொன் பூப்ப என்றார். வேண்டியது விளைக்கும் ஆற்றலை யென்கின்றாராதலால், அவ்வாற்றலின் எல்லையைச் செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் டிங்களுள் வெயில் வேண்டினும் என்றார். ஈவாரும் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர் (குறள், 1058. மேற்.) என்பவாகலின், இங்கும், உடையோ ரீதலும் இல்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையற வுடைத்தெனக் கூறுவாராயினர். செய்தல் நுகர்தலாதலால், செய் நுகர்ச்சியென்றதற்கு நுகரும் நுகர்ச்சி யென்றார். |