57. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் இப்பாண்டிவேந்தன்,ஒருகால்பகைவர்மேற்போர்குறித்துச் செல்லலுற்றானாக, அவனைக் காணப் போந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால், வேந்தே, நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க; ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக; நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க; அவர் கடிமரங்களை மட்டும் தடியாமல் விடுக; அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல என்று பாடுகின்றார்.
இக் காரிக்கண்ணனார், காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் சிறந்த செய்யுள் செய்யும் செந்நாப் புலவர். இவர் காலத்தே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருவரை யொருவர் அடுத்து வாழ்ந்தனர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் இவர் காலத்தவன். இச் சோழன் நம் கண்ணனார்பால் நன்மதிப்புக்கொண்டு, அவர் சொல்வழி நின்று சீர்த்தியுற்றான். அங்கே காவிரி கடலொடு கலக்கும் நீர்த்துறைக்கண் போந்து பரவும் கடலோதம், தான் வருங்கால் இறாமீனைக் கொணர்ந்தெற்றி மீண்டு செல்லும்போது மகளி ரெறிந்த கோதைகளைக் கொண்டேகு மெனத் தமக்குரிய நகரின் சிறப்பை யெடுத்தோதுவர். ஒருகால் இவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டார். கண்டவர், இருவரது ஒற்றுமையால் உண்டாகும் நலத்தை வியந்து, இருவீரும் உடனிலை திரியீராயின், இமிழ் திரைப் பௌவ முடுத்த இப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யாகாதே என்று கூறி, என்றும் இன்றே போல்கநும் புணர்ச்சி யென வற்புறுத்திப் பெருஞ் சிறப்புற்றார். பிட்டங் கொற்றன் என்பவனுடைய வண்மையைப் புகழ்ந்து பாடிய இவர், அவன் உள்ளடி, முள்ளும் உறாற்க தில்ல என்றும், ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே என்றும் வாழ்த்துவர். ஆஅய் அண்டிரன் இரவலர் வருவதுணர்ந்து அவர்க்கு யானைகளைத் தொகுத்து வைத்தளிப்ப னென்றும், கோச ரென்பார் படைப்பயிற்சி செய்யுமிடத்து, முருக்கமரத்துப் பெருங் கம்பத்தை நிறுத்திப் பயிலுவ ரென்றும் கூறுவர். | வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின் | 5. | நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் | | டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க நனந்தலைப் பேரூ ரெரியு நக்க மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம் | 10. | கடிமரந் தடித லோம்புநின் | | நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57) |
திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
உரை: வல்லா ராயினும் - யாதொரு கல்வியை மாட்டாராயினும்; வல்லுந ராயினும் - அதனை வல்லா ராயினும்; புகழ்தலுற்றோர்க்கு மாயோன் அன்ன - புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனை யொத்த; உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற - சொல்லுத லமைந்த தலைமையையுடைய புகழமைந்த மாற; நின் ஒன்று கூறுவ துடையேன் - நினது ஒரு காரியஞ் சொல்லுத லுடையேன்; என் னெனில் அது யாதெனின்; நீ பிறர் நாடு கொள்ளுங் காலை - நீ நின் பகைவர் நாட்டைக் கொள்ளுங் காலத்து; அவர் நாட்டு இறங்கு கதிர்க் கழனி - அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை; நின் இளையரும் கவர்க - நின்னுடைய வீரரும் கொள்ளை கொள்க; நனந் தலைப் பேரூர் எரயும் நக்க - அகலிய இடத்தையுடைய பெரிய வூரைத் தீயும் சுடுக; மின்னு நிமிர்ந் தன்ன நின் ஒளி றிலங்கு நெடு வேல் - மின் நிமிர்ந்தாற் போன்ற நினது பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல்; ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க - பகைவரை யழிக்கினும் அழிக்க; என்னதூஉம் - யாவதும்; கடி மரந் தடிதலோம்பு - காவன் மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக; நின் நெடு நல் யானைக்குக் கந்தாற்றா - நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டு நிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டா வாதலான் எ-று.
அவை இளமர மாதலால், நின் நெடுநல் யானைக்குத் றியாதற்குப் பொறையாற்றா வென்று உரைப்பாரு முளர். வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப் புகழ்ந்து முடிய வொண்ணாமையான், மாயோ னன்ன வென்றார். அன்றி, அவ்விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின் அவ்வாறு கூறிற் றெனினு அமையும். மாற, நின் யானைக்குக் கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடித லோம்பெனக் கூட்டுக.
நின் யானைக்குக் கந்தாற்றா வாதலால் கடி மரந் தடித லோம்பெனக் கூறுவான்போல் சந்து செய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சி யாயிற்று.
விளக்கம்: வல்லுந ரென்பதற்கு, மறுதலை வல்லாரென் றறிக. வல்லுநரும் வல்லாருமாகிய இருதிறந்தார் புகழினும் மாயோன் ஏற்றுக் கோடலை, ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக், கிறும்பூ தன்மை நற்கறிந்தே மாயினும், நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்ப (பரி.4) என்று சான்றோர் கூறுதலா லறிக. நின்னொன்று கூறுவ தென்ற விடத்து நினக் கென்னாது நின தென்றது, கூறுவதாகிய ஒன்று அவனது செய லென்பது தோன்ற; நினக்கென்ற வழி, அவ்வொன்று பிறரதாகலும் கூடும். இறங்கு கதிர்க் கழனி - முற்றி விளைந்து வளைந்து நிற்கும் கதிர்களையுடைய நெல் விளையும் கழனி. பாடஞ் செய்தலாவது, வடித்துத் தீட்டி நெய் பூசி உறையிலிட்டு வைத்தல். கடிமரந் தடிந்தாலன்றி வென்றி நிரம்பாதாகலின், அதனைச் செய்யற்க வென்றது, கழனியைக் கவர்தல் முதலிய செயல் தண்ட மாத்திரையே பகைவர் பணிந்து திறைபகரலுறுவர்; அதனை யேற்றுப் போரைத் தவிர்த்து அவரை யருளுதல் வேண்டும் என்பதுபட நிற்றலின், சந்து செய்விக்கும் நினைவாற் கூறியவாறாயிற்று; ஆகவே, இது துணைவஞ்சி யாயிற்றென வறிக. |