62. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன்
வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

     சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்வன்மையும், கொடைச்
சிறப்பும் மிக வுடையவன். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பதிகம் கூறும்
சேரமான் இவனாயின், இவற்குப் பின் அரசுகட்டி லேறியவன் ஆடுகோட்பாட்டுச்
சேரலாதனாவான். வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி பெருநற்கிள்ளி
யெனவும் வழங்கப்படுவன் போலும். இவ்விரு பெருவேந்தர்க்கும்
மண்ணாசையின் விளைவாகப் போருண் டாயிற்று. கழாத்தலையாராகிய
சான்றோர் சேரலாதன் போர்க்களத் திருப்பதை யறிந்து அவனைக் காண்பது
கருதிச் சென்றார். அவர் சென்று காணும்போது இரு வேந்தரும் பொருது
விழுப்புண் பட்டு வீழ்ந்து கிடந்தனர். சேரமான் உயிர் நீங்குந்தறுவாயி லிருப்பக்
கண்ட அச் சான்றோர், அவன் புகழ்பாடி வியந்தாராக, அவன் தன்
கழுத்திலிருந்த ஆரத்தை வழங்கி இறவாப் புகழ் பெற்றான். சிறிது போதில்
அவன் உயிரும் நீங்கிற்று. இருவரும் வீழ்ந்து கிடத்தலைக் காணுந்தோறும்
கழாத்தலையார், ஆறாத்துயர மெய்தி, இப்பாட்டால், “செருமுனிந்து, அறத்தின்
மண்டிய மறப்போர் வேந்தர் தாமும் மாய்ந்தனர்; அவரை நிழல் செய்த
குடைகளும் துளங்கின; அவர் தம் வெற்றியும் குடையும் நுவலும் முரசமும்
ஒழிந்தன; போர் மறவர் தாமும் எஞ்சாது வீழ்ந்தமையின் அமரும் உடன்
வீழ்ந்தது. இவர்தம் பெண்டிரும் பாசடகு மிசைதல், பனிநீர் மூழ்கல் முதலிய
கைம்மைச் செயல்களை விரும்பாது இவர்தம் மார்பகம் பொருந்தி உயிர்
துறந்தனர்; இமையா நாட்டத்தவரும் நிறைய விருந்து பெற்றனர்; இவர்தம் புகழ்
மேம்படுவதாக” எனப் பாடிச் சிறப்பித்தார்.

     கழாத்தலையார் பெயர் கழார்த் தலையார் என்றும் காணப்படுகிறது.
முதுமக ளொருத்தியின் தலையை, “நறுவிரை துறந்த நாறா நரைத்தலை”
யென்றது போலக் கழாத்தலை யென்று பாடிய சிறப்பால் இவர் இப்பெயர்
பெற்றன ராதல் வேண்டும். கழார்த் தலையார் என்பதே பாடமாயின், காழர்
என்னும் ஊரின ராதல் வேண்டும். கழாத்தலை யென்பதே ஓர் ஊரென்பதும்,
இவர் அவ்வூரின ரென்றும் கூறுப. ஒருகால், இருங்கோவேளின் முன்னோரில்
ஒருவன் இவரை இகழ்ந்தமையால், வேளிர்க்குரிய அரைய மென்னும் நகர்
கெட்டதெனக் கபிலர் (புறம்.202) கூறுகின்றார். இவர் செய்யுள் புலவர் புகழும்
சிறப்புடைய தென்றும் இவர் பெயர் கழாத்தலை யென்றும் தோன்ற, “புகழ்ந்த
செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயன்” என்று கபிலர் கூறுவது ஈண்டு
நினைவுகூரத் தகுவதாம். இவர், குடக்கோ நெடுஞ்சேரலாதன்பால் ஆரம்
பெற்றதும், பிறவும் மேலே கூறினாம்.

வருதார் தாங்கி யமர்மிகல் யாவது
பொருதாண் டொழிந்த மைந்தர் புண்டொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்த றீட்டி
நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர்
5.எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்
தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
10.பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
15.மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே
வாடாப்பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரு மாற்ற
அரும்பெற லுலக நிறைய
விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே. (62)

     திணை: தும்பை. துறை: தொகைநிலை. சேரமான் குடக்கோ
நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும்
போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.

     உரை: வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது - வருகின்ற
தூசிப்படையைத் தடுத்துப் போரின்கண் ஒருவர் ஒருவரை வெல்வே
மென மிகுதல் எங்ஙனமாவது; பொருது ஆண்டொழிந்த மைந்தர் -
பொருது அக்களத்தின்கட்பட்ட வீரரது; புண் தொட்டுக் குருதிச்
செங்கை - புண்ணைத் தோண்டி அவ்வுதிரந் தோய்ந்த செய்ய கையால்;
கூந்தல் தீட்டி - தமது மயிரைக் கோதி; நிறங் கிளர் உருவிற் பேஎய்ப்
பெண்டிர் - நிறமிக்க வடிவையுடைய பேய் மகளிர்; எடுத் தெறி
அனந்தற் பறைச் சீர் தூங்க - மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான
ஓசையையுடைய பறையினது தாளத்தே யாட; பருந்து அருந்துற்ற
தானையொடு - பருந்து ஊனைத் தின்னப் பொருந்திய படையானே;
செருமுனிந்து - போரின்கண் வெகுண்டு; அறத்தான் மண்டிய மறப்போர்
வேந்தர்தாம் மாய்ந்தனர் - அறத்தின் அடர்த்துச் செய்த
வலிய போரையுடைய அரசர் இருவரும் பட்டார்; குடை துளங்கின -
அவர் கொற்றக் குடையும் தளர்ந்தன; உரை சால் சிறப்பின் முரைசு
ஒழிந்தன -புகழமைந்த தலைமையையுடைய முரசு வீழ்ந்தன;
பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் - பல நூறாக அடுக்கப்பட்ட
பதினெண் பாடை மாக்களாகிய படைத் தொகுதி; இடம் கெட ஈண்டிய
வியன் கண் பாசறை- இடமில்லை யாம்படி தொக்க அகன்ற
இடத்தையுடைய பாடிவீட்டின்கண்; களம் கொளற்கு உரியோர் இன்றி -
போர்க்களம் தமதாக்கிக் கொள்ளுதற் குரியோர் ஒருவரின்றி; தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமர் - கண்டார்க்கு அச்சம் வர வுடனே மடிந்தது
பூசல்; பெண்டிரும் பாசடகு மிசையார் - அவர் பெண்டிரும் பச்சையிலை
தின்னாராய்; பனி நீர் மூழ்கார் - குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்;
மார்பகம் பொருந்தி - அவர் மார்பகத்தைக் கூடி; ஆங்கு அமைந்தனர்
- அக் களத்தின் கண்ணே உடன் கிடந்தார்; வாடாப் பூவின் இமையா
நாட்டத்து நாற்ற வுணவினோரும் - வாடாத கற்பகத்தின் தாரினையும்
இமையாத கண்ணினையும் நாற்றமாகிய உணவினையுமுடைய தேவர்களும்;
ஆற்ற அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் - மிகப்
பெறுதற்கரிய உலகம் நிரம்ப விருந்து பெற்றார்; பொலிக நும் புகழ் -
அதனால் பொலிக நுங்கள் புகழ் எ-று.

     அனந்தல், பறை கொட்டுவார் கை புண்படுதலின் மந்தமாக ஒலித்தல்.
அறத்தின் மண்டுதலாவது, படை பட்டபின் பெயராது சென்று இரு பெரு
வேந்தரும் பொருதல். பட்ட இரு வேந்தரும் அக் களத்துக் கிடக்கின்ற
படியைக் கண்டு, தம் மனத்தோடு நொந்து கூறுகின்றாராதலான், நும் புகழென
முன்னிலையாக்கிக் கூறினார். வேந்தர் மாய்ந்தனர்; குடை துளங்கின; முரசு
ஒழிந்தன; அமர் உடன் வீழ்ந்து; பெண்டிரும் மார்பகம் பொருந்தி அமைந்தனர்;
நாற்ற உணவினோரும் விருந்து பெற்றனர்;

     இவ்வாறான பின்பும் யாம் அமரினை மேற்கொண்ட பொருது வெல்வே
மென்று தாந்தாம் நினைந்த நினைவு எவ்வண்ணமாவதென்று தன் நெஞ்சொடு
கூறிப் பின் பொலிக நும் புகழே யென அவ்வரசர் கிடந்தவாறு கண்டு
கூறியவாறு.

     மறத்தின் மண்டிய வென்ற பாடமோதுவாரு முளர். வருதார் தாங்கி
அமர் மிகல் யாவது என்பதற்கு, இவர்கள் செய்தபடி கண்டு......இனிச் சிலர்
பொருது வேறல் எங்கே யுளது என வியந்து கூறியதாக வுரைப்பாரு முளர்.

     விளக்கம்: அமரின்கண் மிகுதல் என்பது ஒருவர் ஒருவரை
வெல்வேமென மிக்குற நினைத்து முயறல். அனந்தல் - மயக்கம், ஈண்டு
மந்தமான ஓசைமேல் நின்றது. அருந்தவுற்ற வென்பது அருந்துற்றவென
நின்றது. பாசடகு மிசைதலும் பனிநீர் மூழ்கலும் கணவனை யிழந்த மகளிர்
மேற்கொள்ளும் கைம்மைச் செயல்.பைஞ்ஞிலம், மக்கட்டொகுதி: “உண்ணாப்
பைஞ்ஞிலம் (பதிற். 31) என்று பிறரும் வழங்குப. வேந்தர் மாய்ந்தனர்; குடை
துளங்கின; அமரும் வீழ்ந்தது எனப் படர்க்கைக்கண் கூறிவந்த ஆசிரியர்,
“பொலிக நும் புகழ்” என முன்னிலைப்படுத்துரைத்தற்கு அமைதி காட்டுவார்,
“பட்ட இருவேந்தரும்.....கூறினார்” என்றார். தேவரை வழிபடுவோர்
“நறும்புகை” யிடுவது அவர்கள் நாற்ற வுணவினோ ராதல்பற்றி யென அறிக.