159. குமணன்

     பெருஞ்சித்திரனார், இப் பாட்டின்கண், வறுமைத் துயரால் தன்னைப்
பெற்ற முதிய தாயும், இனிய மனைவியும், பலராகிய மக்களும் உடல்
தளர்ந்து மேனி வாடிக் கிடப்பதும் அவர் நெஞ்சு மகிழுமாறு தான்
பொருள் பெற்றுச் செல்லவேண்டி யிருப்பதும் எடுத்தோதி, “யான் களிறு
முதலிய பரிசில் பெறுவேனாயினும் முகமாறித் தரும் பரிசிலைப் பெற
விரும்பேன்; நீ உவந்து யான் இன்புற விடை தருவையேல் குன்றிமணி
யளவிற்றாயினும் நீ தரும் பரிசிலை விரும்பி யேற்றுக் கொள்வேன்; எனக்கு
அவ் வின்பமுண்டாகும் வகையில் என்னை யருள வேண்டுகின்றேன்”என்று
கூறுகின்றார்.
 

 வாழு நாளோ டியாண்டுபல வுண்மையின்
தீர்தல்செல் லாதென் னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று
5முன்றிற் போகா முதிர்வினள் யாயும்
 பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
10முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று
 நீருலை யாக வேற்றி மோரின்
றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த வுடுக்கைய ளறம்பழியாத்
துவ்வா ளாகிய வென்வெய் யோளும்
15என்றாங், கிருவர் நெஞ்சமு முவப்பக் கானவர்
 கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனம் செல்லா வேனற் கிழுமெனக்
கருவி வானந் தலைஇ யாங்கும்
20ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென்
 பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப
உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ
இன்புற விடுதி யாயிற் சிறிது
25குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண
 அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றனிற் பாடிய யானே.   (159)

     திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர்
பாடியது.

     உரை: யாண்டு பல உண்மையின் - தனக்குச் சென்ற
ஆண்டுகள் பலவுண்டாதலின்; தீர்தல் செல்லாது என் உயிர் என -
இன்னும் போகின்றதில்லை எனதுயிர் என்று சொல்லிக் கொண்டு;
வாழு நாளோடு பல புலந்து - வாழும் நாளோடு பலவாக வெறுத்து;
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி - தான் பிடித்த தண்டே
காலாகக் கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து;
நூல் விரித் தன்ன கதுப்பினள் - நூலை விரித்தாற்போலும் மயிரை
யுரையவளாய்; கண் துயின்று முன்றிற் போகா முதிர்வினள் யாயும் -
கண் மறைந்து முற்றத் திடத்துப் புறப்பட மாட்டாத மூப்பை யுடைய
தாயும்; பசந்த மேனியொடு - பசப்புற்ற மேனியுடனே; படர் அட
வருந்தி - நினைவு வருத்த வருந்தி; மருங்கில் கொண்ட பல் குறு
மாக்கள் - மருங்கிலே யெடுத்த பல சிறு பிள்ளைகள்; பிசைந்து
தினவாடிய முலையள் - பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினை
யுடையளாய்; பெரிது அழிந்து - மிகவும் வருந்தி; குப்பைக் கீரை
கொய்கண் அகைத்த  முற்றா இளந் தளிர் கொய்து  கொண்டு -
குப்பையின்கண்  படு   முதலாக  வெழுந்த   கீரையினது   முன்பு
கொய்யப்பட்ட  கண்ணிலே கிளைத்த முதிராத இளைய  தளிரைப்
பறித்துக்கொண்டு; உப்பின்று நீர் உலையாக ஏற்றி - உப்பின்றியே
நீரை உலையாகக்கொண்டு ஏற்றிக் காய்ச்சி; மோர் இன்று - மோர்
இன்றி; அவிழ்ப் பதம் மறந்து - அவிழாகிய உணவை மறந்து; பாசடகு
மிசைந்து - பசிய இலையைத் தின்று; மாசொடு குறைந்த உடுக்கையள்
- மாசோடு      கூடித்      துணிபட்ட         உடையினளாய்;
அறம் பழியா - அறக் கடவுளைப் பழித்து; துவ்வாளாகிய என்
வெய்யோளும் - உண்ணாளாகிய என்னை விரும்பியோளும்; என்ற -
என்று சொல்லப்பட்ட; இருவர் நெஞ்சமும் உவப்ப - இருவருடைய
நெஞ்சமும் காதலிப்ப; கானவர் கரி புனம் மயக்கிய அகன்கண்
கொல்லை - வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத
அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண்; ஐவனம் வித்தி - ஐவன
நெல்லோடு வித்தி; மையுறக் கவினி - இருட்சியுற அழகு பெற்று;
ஈனல் செல்லா ஏனற்கு - கோடை மிகுதியான் ஈன்றலைப்
பொருந்தாத தினைக்கு; இழு மெனக் கருவி வானம் தலைஇ யாங்கும்
- இழு மென்னும் அனுகரண வொலியுடனே மின்னும் இடியு முதலாகிய
தொகுதியை யுடைய மழைத் துளியைச் சொரிந்தாற் போல; ஈத்த
நின் புகழ் ஏத்தி - தந்த நினது புகழை வாழ்த்தி; பசி தினத்
திரங்கிய தொக்க என் ஒக்கலும் உவப்ப - பசி தினலால் வருத்தமுற்ற
ஈண்டிய எனது சுற்றமும் மகிழ; உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்
களிறு பெறினும் - மேம்பட்டு ஏந்திய கோட்டையுடைய கொல்
யானையைப் பெறினும்; தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் -
முகமாறித் தரும் பரிசிலைக் கொள்ளேன்; உவந்து நீ இன்புற விடுதி
யாயின் - மகிழ்ந்து நீ யான் இன்புற விரையத் தந்து விடுவையாயின்;
சிறிது குன்றியும் கொள்வல் - சிறிதாகிய குன்றி யென்னும்
அளவையுடைய பொருளாயினும் கொள்வேன்; கூர் வேல் குமண -
கூரிய வேலையுடைய குமணனே; அதற்பட அருளல் வேண்டுவல் -
அவ்வின்புறுதற்கண்ணே பட அருளுதலை வேண்டுவேன்; விறல் புகழ்
வசையில் விழுத்திணை பிறந்த - வென்றிப் புகழையுடைய
வசையில்லாத சிறந்த குடியின் கட்பிறந்த; இசைமேந் தோன்றல் -
இசை மேம்பட்ட அண்ணலே; நிற் பாடிய யான் - நின்னைப் பாடிய
யான் எ-று.

     குமண, இசை மேந் தோன்றல், நிற்பாடிய யான், கொல் களிறு
பெறினும் தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; இருவர் நெஞ்சமுமு்
உவப்ப, ஒக்கலும் உவப்ப, உவந்து இன்புற விடுதியாயின் குன்றியுங்
கொள்வேன்; அதற்பட அருளல் வேண்டுவல் எனக் கூட்டி வினை முடிவு
செய்க.

     “வாழு நாளோடு யாண்பல வுண்மையின்”என்பதற்கு இன்ப நுகர்ந்து
கழிந்து இளமை நாளுடனே மூப்பு வந்து துன்புற்ற யாண்டு பல வுண்மையின்
எனினு மமையும். குன்றியு மென்பதற்குக் குறைந்து மென்றுரைப்பாரு முளர்.
ஆங்கும் என்னும் உம்மை இசைநிலை.

     விளக்கம்: உரைகாரர், படுமுதல் என்றது, பிறர் விதைக்க
முளையாது தானே காற்றாலும் நீராலும் பிற வுயிர்களாலும் விதை சிதறப்
பட்டுத் தானே முளைத்தது என்றவாறு. முகமாறித் தரும் பரிசில் -
வருந்தியும் வருத்தியும் நல்கப் பெறும் பரிசில். பரிசிலின்
இன்றியாமையாமையும், அதனைப் பெறுதற்கண் தாம் கொண்ட கருத்தும்
எனஇருகூறாகப் பெருஞ்சித்திரனார் குமணனைப் பரிசில் கடாவும் நிலை
கருதத்தக்கது. இன்றியமையாமை, தாயும் மனைவியும் ஒக்கலும் வருந்தும்
வருத்தங் கூறுமாற்றால் விளக்கின்றார். ஈன்ற தாய், முதுமை மிக்க மயிர்
நரைத்துக் கண்ணொளி யவிந்து கோல் காலாக முன்றிற் போகமாட்டாத
நிலையினளாதலைக் கூறி, வறுமைத் துயரால் அவருரைக்கும் உரையினை,
“வாழு நாளோடு யாண்டுபல வுண்மையின், தீர்தல் செல்லாது என் உயிர்”
என்று கொண்டெடுத்து மொழிந்தார். பல மக்களைப் பெற்றுக் கணவனொடு
புலந்து பல கூறும் உரிமை மிக்க நிலையினளாகியும் தன் மனைவி, தன்னை
வேறாது “அறம் பழியாத் துவ்வாளாகிய” நிலையினைக் கூறி, அந்
நிலையினும் தன்னை வெறாது விளங்கும் வீறு பாட்டினை, “என்
வெய்யோளும்”எனக் குறித்தார். குப்பைக் கீரையைக் கொள்ளுமிடத்தும்,
கணுவிற் றழைத்த முற்றா இளந்தளிரையே கொண்டது கூறியதனால்,
மனைவியின் வளத்தக்க வாழ்க்கைத் துணையாம் இயல்பினை
வற்புறுத்துகிறது. “இருவர் நெஞ்சமும் உவப்ப”ல்குக வென்றது,
மனைவாழ்வு இன்பமாதற் பொருட்டு. இவ் வறுமை நிலையினும் ஒக்கல் சூழ
வாழுமாறு தோன்ற, “தொக்க என், பசிதினத் திரங்கிய ஒக்கல்”என்றார்.
தந்தையைக் கூறாமையின், இக் காலத்தே இவர் தந்தை இறந்து போனமை
விளங்குகிறது. “ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க, சான்றோர்
பழிக்கும் வினை”(குறள். 656) என்றமையின், “கொல் களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்”என்றும், “இன்புற விடுதியாயின்,
குன்றியுங் கொள்வல்”என்றும் தம் உட்கோள் கூறினார். “அதற்பட
அருளல் வேண்டும்”என்றது, வறுமையால் நொந்துள்ள தன் உள்ளம்,
மேலும் நோயுற்றுக் கெடாவாறு தெரிவித்துக் கொண்டவாறாம்.