4. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

      இச் சோழவேந்தன்  கரிகால்வளவனுக்குத்  தந்தை   யென்பர்.
பொருநராற்றுப்படைகாரர் கரிகாலனை, “உருவப் பஃறேர் இளையோன்
சிறுவன்” என்பர்.இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கொடை
கொண்டான்    எனத்   தொல்காப்பியவுரையில்   நச்சினார்க்கினியர்
உரைக்கின்றார்.  பெருங்குன்றூர்கிழார்,  இவனை,  “நீர்நிகழ்   கழனி
நாடுகெழு  பெருவிறல்,  வான்றேய்  நீள்குடை   வயமான்  சென்னி”
(புறம்.266)  என்று  பாராட்டுகின்றார்.  இனி,  இப்  பாட்டைப் பாடிய
பரணர்  சங்கத்  தொகை   நூல்களுட்   காணப்படும்   பாட்டுக்கள்
பலவற்றைப்  பாடியவர்.  இவர்   பாட்டுக்கள்   கற்பனை   வளமும்
வரலாற்றுக் குறிப்பும் செறிந்தனவாகும்.  இப்புறநானூற்றின்கண்  இவர்
பாடியனவாகப்  பதின்மூன்று  பாட்டுக்கள்   உள்ளன.   அதியமான்
கோவலூரை யெறிந்த காலத்து அவனை இவர் பாராட்டிப் பாடியதாக
ஒளவையார்  குறிக்கின்றார். இவர்  மருதத்திணையை  அழகொழுகப்
பாடும்  அமைதியுடையவர்.

      இப் பாட்டின்கண்      ஆசிரியர்     பரணர்,     உருவப்
பஃறேர்  இளஞ்சேட்  சென்னியின்   காலாட்படை,  குதிரைப்படை,
யானைப்படை,  தேர்ப்படை,  யென்ற நான்கும் போருழந்து. சிறக்கும்
பெருமையைப் புகழ்ந்து, தேர்மீது தோன்றும் அவனை, “நீ, மாக்கடல்
நிவந்தெழுதரு,செஞ்ஞாயிற்றுக் கவினை” என்றும், “நீ இத்தன்மையாக,
நின்னைப்   பகைத்தோருடைய  நாடு  அழியுமென  அதன் அழிவுக்
கிரங்கி, “தாயில் தூவாக்  குழவி  போல  ஓவாது  கூவும்”  என்றும்
கூறுகின்றார்.

 வாள், வலந்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப்போன்றன
தாள், களங்கொளக் கழல்பறைந்தன
கொல்ல லேற்றின் மருப்புப் போன்றன
5.தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ
 நிலைக்கொராஅ இலக்கம்போன்றன
மாவே, எறிபதத்தான் இடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
10.களிறே, கதவெறியாச் சிவந்துராஅய்
 நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிருண்ணுங் கூற்றுப்போன்றன
நீயே, அலங்குளைப் பரீஇஇவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
15.மாக்கடல் நிவந்தெழுதரும்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை ஆகன் மாறே
தாயின் தூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே. (4)

     திணை :  வஞ்சி ;  துறை:  கொற்றவள்ளை. சோழன் உருவப்
பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது.

     உரை : வாள்  வலந்தர மறுப்பட்டன - வாள் வெள்ளியைத்
தருதலாற்  குருதிக்கறை  பட்டன;   செவ்வானத்து   வனப்புப்
போன்றன -  செக்கர்வானத்தினது  அழகை  யொத்தன;  தாள்
களங்கொளக் கழல்பறைந்தன -  கால்  புடைபெயர்ந்து  போர்
செய்து   களத்தைத்  தமதாக்கிக்  கொள்ளுதலால்  வீரக்கழல்
அருப்புத்தொழில்   பறைந்தவை;   கொல்லேற்றின்   மருப்புப்
போன்றன -  கொல்லும்  ஆனேற்றினது  கோட்டை யொத்தன;
தோல் துவைத் தம்பின் துளை தோன்றுவன;  நிலைக்கு  ஒராவு
இலக்கம் போன்றன - நிலையிற் றப்பாத இலக்கத்தை யொத்தன;
மா எறிபதத்தான் இடம் காட்ட - குதிரைகள் எதிரியை யெறியும்
காலமுடையான் இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட; கறுழ்
பொருத  செவ்வாயான் - முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை
யுடைமையான்;  எருத்து  வவ்விய   புலி   போன்றன - மான்
முதலாயினவற்றின்   கழுத்தைக்  கவ்வி  யுதிரம் உவற்றியுண்ட
புலியை  யொத்தன;  களிறு - களிறுகள், கதவெறியாச்  சிவந்து
உராஅய் - கதவை  முறித்து  வெகுண்டுலாவி;  நுதி மழுங்கிய
வெண்கோட்டான்   -     நுனை      தேய்ந்த     வெளிய
கோட்டையுடைமையான்; உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன -
உயிரையுண்ணும்   கூற்றை   யொத்தன;    நீயே -   நீதான்;
அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந்  தேர்மிசை   - அசைந்த
தலையாட்டமணிந்த கதியையுடைய   குதிரையாற்  பூட்டப்பட்ட
பொற்றேரின்   மேலே;   பொலிவு  தோன்றி -  பொலிவொடு
தோன்றுதலால்;  மாக்கடல்  நிவந்து  எழுதரு செஞ்ஞாயிற்றுக்
கவினை - கரிய கடலின்கண்ணே யோங்கி  யெழுகின்ற செய்ய
ஞாயிற்றினது  ஒளியையுடையை;  அனையை  யாகன்   மாறு -
அத்தன்மையையாதலால்;  தாயில்  தூவாக்   குழவி   போல -
தாயில்லாத உண்ணாக் குழவி போல;  ஓவாது  கூஉம் ஒழியாது
கூப்பிடும்;  நின்    உடற்றியோர்    நாடு    -    நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு எ-று.

     நாடென்றது,  நாட்டுள்  வாழ்வாரை. மாறென்பது ஏதுப்பொருள்
படுவதோர்  இடைச்சொல்.  கழல்  பறிந்தன  வென்றோதி வீரக்கழல்
நீங்கியவை  யென்றுரைப்பாரு  முளர்.   வாளாகிய   மறுப்பட்டவை
யெனவும்.  கழலாகிய   பறைந்தவையெனவும்,   தோலாகிய   துளை
தோன்றுவவெனவும்  கொள்க. துவைத்துத் தோன்றுவவென வியையும்.
எறிபதத்தா  னென்பதற்கு  ஒத்தும்  காலையுடையானென் றுரைப்பாரு
முளர். செஞ்ஞாயிற்றுக் கவினையென்ற துணையும் மன்னவன்  புகழும்
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடென ஒன்னார் நாடழி பிரங்கலும்
ஓதலான் இது கொற்றவள்ளை யாயிற்று.

     விளக்கம்: போர் செய்யுமிடத்துக் குருதிக் கறை படிந்து சிவந்து
தோன்றும்  வாட்படைக்குச்  செக்கர் வானம் உவமம்.வீரரணியும் கழல்
முல்லையரும்புபோல  வேலைப்பாடமைந்தவையாதலால், அவை வீரர்
தம்முடைய காலை முன்னும் பின்னும்  பக்கத்தும்  புடை  பெயர்த்து
வைத்துத்    தாவடியிட்டுப்     பொருங்கால்   பிறர்   கழலோடும்
நிலத்திற்கிடக்கும் பிறவற்றோடும் உடைப்புண்டு அரும்புகள் உதிர்ந்து
மழுங்கி விடுதலைப் பறைதலென்று கூறுகின்றாராதலால், போரின்கண்
களத்தைத்  தமதாக்கிக்  கொள்ளும்  முயற்சியில்  வீரர்   கழல்கள்
பறைந்து மழுகுதல் கண்டு “களங்கொளக் கழல் பறைந்தன” என்றார்.
தோல்,   கேடயம்;  இது  பரிசை  யென்றும்  வழங்கும்.  தோலாற்
செய்யப்படுவது பற்றி, இது தோல் என்றும் பெயர் பெறும்.துவைத்தல்,
ஒலித்தல்.   இலக்கம்   இல்வழி,   அதனை     நோக்கி    வீரர்
நிலையின்   றியங்குபவாதலால்,   இலக்கத்தை   “நிலைக்கொராஅ
இலக்கம்”  என்றார்.  எறிபதம்,  பகைவரை  யெறிதற்கு வேண்டுங்
காலம்.  அக்காலம்    வாய்க்கப்பெற்ற    வீரன்   “எறிபதத்தான்”
எனப்பட்டான்.  உவற்றியுண்டல்,  உறிஞ்சியுண்டல். பரி, குதிரையின்
கதி; இது பரீஇயென  அளபெடுத்து  நின்றது,  தோன்றி  யென்னும்
வினையெச்சம்  தோன்றுதலாலெனக்  காரணப்  பொருளில் வந்தது.
தூவாக்  குழவி,  உண்ணாக்குழவி;  துவ்வாமை  தூவாமை   யென
விகாரம்.  “துவைத்   தம்பின்   துளை   தோன்றுவ”   என்பதில்,
துவைத்தென்னும்   வினையெச்சம்   தோன்றுவ   வென்பதனோடு
முடிதலின், “துவைத்துத் தோன்றுவ வென வியையும்”என்றுரைத்தார்.
காலாளும்   குதிரையும்   யானையும்   தேருமாகிய   படையினது
மேற்செலவினைப் பாராட்டிக்கூறுதலால் இது வஞ்சித்திணையாயிற்று.
கொற்றவள்ளையாவது   வேந்தனது   புகழைப்   பாராட்டி, அவன்
பகைவர் நாட்டது    அழிவுக்    கிரங்கிக்    கூறுவது.   இதனை
விளக்குதற்பொருட்டே   உரைகாரர்,   “செஞ்ஞாயிற்றுக்  கவினை
......கொற்றவள்ளை யாயிற்” றென்றார்.