152. வல்வி லோரி

    வேள் பாரி முதலாகக் கூறப்படும் வள்ளல்கள் நிரலில்
கூறப்படும் வல்வி லோரி இவனே. இவனைக் “கொல்லியாண்ட வல் வில்
ஓரி”(புறம்.148) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க. இவனை
ஆதனோரி யென்றும் சான்றோர் வழங்குப. இக் கொல்லி மலை, பலா,
கரு வாழை முதலிய கனியுடை மரங்கள் நிறைந்தது. இம் மலையில்
தெய்வங்கள் கூடி அழகு மிக்க பாவை யொன்றைச் செய்துவைத்திருந்தன
என்று சான்றோர் கூறுவர். வனப்பு மிக்க மகளிர்க்கு அப் பாவையைச்
சான்றோர் உவமமாகக் கூறுவது வழக்கம். அம்மலை ஓரிக்குரியதாயினும்
அதனால் அவர்கள் முள்ளூர் மன்னனாகிய காரி யென்பானுக்கும் இந்த
வல் வில் ஓர்க்கும் பகைமை தோற்றுவித்து, அதுவே வழியாக அக்
கொல்லியைக் காரி யென்பான் கைப்பற்றித் தமக் களித்துவிட வேண்டுமென
ஏற்பாடு செய்து கொண்டனர். இதனைத் தன் ஒற்றர்களால் அறிந்துகொண்ட
ஓரி, காரியின் முயற்சியைக் கெடுத்தற்குப் போர் தொடுத்தான். ஓரியும்
காரியும் தத்தமக்குரிய ஓரி, காரி யென்ற குதிரைமேலேறிப் பொரத்
தொடங்கினர். காரிக்குச் சேரர் படை துணை செய்தது. முடிவில் முள்ளூர்
மன்னனான காரி  ஓரியைக் கொன்று அவனது கொல்லிமலையைத் தான்
முன்பு செய்துகொண்ட ஏற்பாட்டிற்கியையச் சேரர்க் களித்தான். இதனைக்
கல்லாடனார், “செவ்வேல், முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி, செல்லா
நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரர்க்கீத்த, செவ்வேர்ப் பலவின்
பயங்கெழு கொல்லி”(அகம்.209) என்று கூறியுள்ளார். ஓரியைக் கொன்று
சிறப்புற்ற, காரி,  பின்னர்த்   தன்  பகைவர்  நாட்டிற்  புகுந்த  காலை
ஆண்டெழுந்த    ஆரவாரம்     பெரிதாயிற்றென்பார்,     கபிலர்,
“பழவிறல் ஓரிக்கொன்ற வொருபெருந்திருவிற், காரி புக்க நேரார்
புலம்போல் கல்லென்றன்றால்” (நற். 320)   என்று  குறித்துள்ளார்.
இவ்வல்வில்   ஓரி  பெரிய கொடையாளி; இசைத் துறையில் மிக்க
ஈடுபாடுடையன்; இரவலரைப் புரக்கும்பெருங்  கடப்பாடுடையன். இவனைக்
கபிலர்,  கல்லாடர்,   வன்பரணர் முதலியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.
இவற்குப் பல ஆண்டுகட்குப் பின்னர்த் தோன்றிய இடைக் கழிநாட்டு
நல்லூர்
நத்தத்தனாரும் பெருஞ்சித்திரனாரும் வள்ளல்கள் வரிசையுள்வைத்து
இவனைப் பாடியுள்ளனர்.

     இவருள், வன்பரணர் கொல்லி மலையைச் சார்ந்த, சுரத்திடத்தே
பாண் சுற்றத்தோடு சென்றுகொண்டிருக்கையில், வேட்டங் காரணமாக
ஆங்கு வந்திருந்த வல்வி லோரியைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தை
இப்பாட்டின்கட் குறித்திருக்கின்றார். ஓரி யென்பான் வேட்டம் புரியுங்கால்,
யானை யொன்றை வீழ்த்தற்குப் புலி யொன்று அற்றம் நோக்கியிருப்பதைப்
பார்த்துவிட்டான். உடனே அவன் தனது வலிய வில்லில் அம்பு தொடுத்து
யானைமேல் எய்தான்: அஃது அவ் யானையை வீழ்த்தி அற்றம் நோக்கி
நின்ற புலியின் அகன்ற வாயுள் தைத்து ஊடுருவிச் சென்று கொன்று,
வழியில் நின்ற கலைமானை மடித்து, அண்மையிலிருந்து காட்டுப் பன்றியை
வீழ்த்தி, அதன் அயலிருந்த புற்றிற்கிடந்த உடும்பின் உடலிற் றைப்புண்டு
வீழ்ந்தது. இதனைக் கண்டு பெருவியப்புற்ற வன்பரணர், “இத்துணைச்
சிறப்பமைந்த வில்லாளனாகிய இவன் ஒரு செல்வத் தோன்றலா மென
எண்ணி, தன் பாண்சுற்றத்துடனே அவனை  வணங்கித்  தலைவன்  திரு
முன்  பாடற்கமைந்த இருபத்தொரு பாடற்றுறையும் பாடி நிற்ப, அவன்
தானெய்த மானின் தசையையும் மதுவையும் தன் மலையிற் கிடைக்கும்
பொன்னையும் தந்து சிறப்பித் தனுப்பினான் என இப்பாட்டிற் கூறுகின்றார்.
கொல்லிமலை சேல மாநாட்டில் நாமக்கல்லைச் சார்ந்த சேந்த
மங்கலத்துக்கு அருகில் உள்ளது.

 வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக்
கேழற் பன்றி வீழ வயல
5தாழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன்
விலைவன் போலான் வெறுக்கைநன் குடையன்
10ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
சார லருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ வல்லன் கொல்லோ
பாடுவல் விறலியோர் வண்ண நீரும்
மண்முழா வமைமின் பண்யாழ் நிறுமின்
15கண்விடு தூம்பிற் கள்ளிற்றுயிர் தொடுமின்
 எல்லரி தொடுமி னாகுளி தொடுமின்
பதலை யொருகண் பையென வியக்குமின்
மதலை மாக்கோல் கைவலந் தமினென்
றிறைவ னாகலிற் சொல்லுபு குறுகி
20மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியாம்
நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர்
வேட்டுவ ரில்லை நின்னொப் போரென
25வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
தானுயிர் செகுத்த மானிணப் புழுக்கோ
டானுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
30சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா வீகை விறல்வெய் யோனே.
  (152)

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் விடை. வல்விலோரியை
வன்பரணர் பாடியது.

    உரை: வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி - ஆனையைக்
கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு; பேழ் வாய்
உழுவையைப் பெரும் பிறிது உறீஇ - பெரிய வாயையுடைய புலியை
இறந்துபாட்டை யுறுவித்து; புழல் தலைப் புகர்க் கலை உருட்டி -
துளை பொருந்திய கோட்டை யுடைத்தாகிய தலையினையுடைய
புள்ளிமான் கலையை யுருட்டி; உரல் தலைக்கேழற் பன்றி வீழ -
உரல்போலுந் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச் செய்து;
அயலாது - அதற்கு அயலதாகிய; ஆழல் புற்றத்து உடும்பில்
செற்றும் - ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கின்ற உடும்பின்கட்
சென்று செறியும்; வல்வில் வேட்டம் வளம்படுத் திருந்தோன் - வல்
வில்லா லுண்டாய வேட்டத்தை வென்றிப் படுத்தி யிருந்தவன்;
புகழ் சால் சிறப்பின் அம்பு - புகழமைந்த சிறப்பினையுடைய அம்பு;
மிகத்திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் - ஏத்
தொழிலிலே மிகச் சென்றுறுதற்குக் காரணமாகிய கொலைவன் யாரோ
தான் கொலைவன்; மற்று இவன் விலைவன் போலான் - மற்று இவன்
விலை யேதுவாகக் கொன்றானாகமட்டான்; வெறுக்கை நன்கு
உடையன் - செல்வத்தை மிக வுடையனாயிருந்தான்; ஆரம் தாழ்ந்த
அம் பகட்டு மார்பின் - சந்தனம் பூசிப் புலர்த்திய அழகிய பரந்த
மார்பினையுடைய; சாரல் அருவிப் பய மலைக் கிழவன் -
சாரற்கண்ணே அருவியையுடைய பயன் படு மலைக்குத் தலைவனாகிய;
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ - ஓரியோஅல்லனோதான்,
அவனாகத் தகும்; பாடுவல் விறலி ஓர் வண்ணம் - யான் பாடுவேன்,
விறலி, ஒருவண்ணம்; நீரும் முழா மண் அமைமின் - நீங்களும்
முழாவின்கண்ணே மார்ச்சனையையிடுமின்; யாழ் பண் நிறுமின் -
யாழிலே பண்ணை நிறுத்துமின்; கண் விடு தூம்பின் களிற்று உயிர்
தொடுமின் - கண்திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது  கைபோலும்
வடிவையுடைய பெரு வங்கியத்தை இசையுங்கோள்; எல்லரி தொடுமின்
- சல்லியை வாசியுமின்; ஆகுளி தொடுமின் - சிறுபறையை
அறையுங்கோள்; பதலை ஒரு கண்பையென இயக்குமின் - பதலையில்
ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுமின்; மதலை மாக்
கோல் வலம் தம்மின் என்று சொல்லுபு குறுகி - *கரிய கோலைக்
கையின் கண்ணே தாருங்கோள் என்று சொல்லி யணுகி;
இறைவனாகலின் மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி -
தலைவனாதலாலேஇருபத்தொரு பாடல் துறையையும் முறையாற் பாடி
முடித்து; கோ எனப் பெயரிய காலை பின்னர்க் கோவே யென்று
அவன் பெயர் கூறிய காலத்து; ஆங்கு அது தன் பெயராகலின்
நாணி - அவ்விடத்து அவ் வார்த்தை தன் பெயராதலால் நாணி;
மற்று - பின்னை; யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும் - யாங்கள்
நாட்டிடந்தோறும் நாட்டிடந்தோறும் சென்று வருவேம்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - இவ்விடத்து ஒரு
வேட்டுவரும் இல்லை நின்னை யொப்போர் என; வேட்டது
மொழியவும் விடாஅன் - யாம்விரும்பியது கூறவும் அதற்குக் காலந்
தாரானாய்; வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப்
புழுக்கோடு - வேட்டையின்கண் தான் எய்த மானினது
நிணத்தையுடைய தசையினது புழுக்குடனே; ஆன் உருக்கன்ன
வேரியை நல்கி - ஆவின் நெய்யை யுருக்கினாற் போன்ற மதுவைத்
தந்து; தன் மலைப் பிறந்த தாவில் நன் பொன் பன்மணிக்
குவையொடும் விரைஇ தன்னுடைய மலையின்கட் பிறந்த வலியில்லாத
நல்ல பொன்னைப் பல மணித் திரளுடனே கலந்து; கொண்ம் எனச்
சுரத்திடை நல்கியோன் - இதனைக் கொண்மின் எனச் சொல்லிச்
சுரத்திடத்தே எமக்குத் தந்தான்; விடர்ச் சிமை ஒருங்கிருங்
கொல்லிப் பொருநன் - முழையையுடைத்தாகிய உச்சியையுடைய
உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன்; ஓம்பா ஈகை விறல்
வெய்யோன் - பாதுகாவாத வண்மையினையுடைய வென்றியை
விரும்புவோன் எ-று.

     புழ லென்றது, ஆகுபெயரால் புழலையுடைய கோட்டை.
களிற்றுயிரென்றது, ஆகுபெயரால் களிற்றினது கைபோலும் வடிவையுடைய
பெருவங்கியத்தை. பாடுவல் விறலி ஓர் வண்ணம் என்றது, நீயும் ஒன்று
பாடுவாயாக வென்னும் நினைவிற்று. நீரும் என்றது, கூட்டத்தை. மூவேழ்
துறையு மென்றது, வலிவு மெலிவு சமமென்னும் மூன்று தானத்திலும்
ஒவ்வொன்று ஏழு தானம் முடித்துப் பாடும் பாடற் றுறையை; அன்றி,
இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும் பேரியாழ் எனினுமமையும்.
தம்மினென்பது, தமின் எனக் குறைந்து நின்றது.

     கொல்லிப் பொருநனாகிய விறல் வெய்யோன் கோவெனப்
பெயரிய காலை, அது தன் பெயராகலின் நாணி வேட்டது மொழியவும்
விடானாய் நல்கியோ னெனக் கூட்டுக.

     விளக்கம்: யானை வீழ்த்த அம்பாதலின், “விழுத்தொடைப் பகழி”
யென்றார். இதனை விடுத்த ஓரியை, “வல் வில் வேட்டுவன்”என்றார்,
ஒரு தொடையில் புலியைக் கொன்று, மானையுருட்டி, பன்றியை வீழ்த்தி,
உடும்பிற்  சென்று செறிதலின். ஒரு தொடுப்பில் இத்துணை யுயிர்களைக்
கொன்றைமையின், “கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன்”
என்றார். ஓரியின் தோற்றம் செல்வம் மிகவுடைய னென்பதை
விளக்கினமையின், “விலைவன் போலான்”என்றும், “வெறுக்கை
நன்குடையன்”என்றும் கூறினார். மண் மார்ச்சனை. பெருவங்கியத்தைக்
களிற்றுயிர் என்றார், அது களிற்றின் கைபோலும் வடிவுடையதாதல்பற்றி.
வண்ணம், இசைப்பாட்டு வகை. “பிழையா வண்ணங்கள் பாடிநின்றாடுவார்,
அழையாமே யருள் நல்குமே”(ஞானசம்.54:5) என வருதல் காண்க. “மதலை
மாக்கோல் கைவலம் தம்மின்”என்பதன் உரையில், “நமது பிறப்புணர்த்தும்
கரிய கோல்”என அச்சுப் பிரதியிற் காணப்படும் பகுதி சில ஏடுகளில்
இல்லை. மூவேழ் துறைகளை, “இசைத் தமைத்த கொண் டேழே யேழே
நாலேமூன்றியலிசை யியல்பா, வஞ்சத் தேய்வின்றிக்கே மனங்கொளப் பயிற்று
வோர்”(ஞானசம்.126:11) என்று ஞானசம்பந்தரும் குறித்தன ரென்பர்.
தம்முன்நிற்போன் வல்விலோரி யென்பதை அறியாராயினும், தாம்
வந்திருப்பது அவனது நாடும் காடுமா மென்பதை யறிந்திருத்தலின், அவன்
பெயரைக் கோவென்ற சொல்லால் சுட்டி யுரைத்ததை, “கோவெனப்
பெயரிய காலை”என்றார். அவனது வல் வில் வேட்டத்தை நேரிற்
கண்டமையின், அதனை விதந்தோதற்கு விரும்பின விருப்பை, “வேட்டது
மொழியவும்”என்றார். ஆன் ஆகுபெயரால் அதனது நெய்யை யுணர்த்திற்று.
தன்பாற் பேரன்பு கொண்டு தனது புகழைத் தன் முன் பாடிய பரிசிலரை
வெறிது விடுத்தல் விழுப்ப மன்றென, ஓரி, மானிணமும் தேனும் பொன்னும்
மணியும் கொடுத்தானென்றார்.


* நமது பிறப்புணர்த்தும் கரிய கோல் என்பது சில ஏடுகளில் இல்லை.