8. சேரமான் கடுங்கோ வாழியாதன்

     சேரமான்  கடுங்கோவாழியாதன், செல்வக்  கடுங்கோவாழியாதன்
என்றும் கூறப்படுவான். இவனைப் “பொறையன் பெருந்தேவி யீன்ற மகன்”
என்று  பதிற்றுப்பத்து  ஏழாம்பதிகம்  கூறுகிறது.  திருமாலிடத்தே இவன்
மிக்க  ஈடுபாடுடையவன்.  இவன்  கபிலருக்கு நூறாயிரங் காணம் பொன்
தந்து  நன்றா  வென்னும்  குன்றேறி  நின்று  தன்   கண்ணிற்   கண்ட
நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்   என  மேலே  காட்டிய பதிகத்தால்
அறியலாம். இவன் இருபத்தையாண்டு  அரசு   புரிந்தானென்ப.  இவனைப்
பாடிய  கபிலர் சங்கத்தொகை   நூல்களில்  உள்ள  பல  பாட்டுக்களைப்
பாடியவர். வேள்பாரியின்  உயிர்த்தோழர்.இவரால்  சிறப்பிக்கப்பட்ட
வள்ளல்களும் வேந்தர்களும் பலர்.இவர்  பாண்டிநாட்டில்  பிறந்த அந்தணர்.
குறிஞ்சித் திணை பாடுவதில்   நிகரற்றவர்.

    இப்பாட்டின்கண்,    ஞாயிற்றை    நோக்கி,   “வீங்கு   செலல்
மண்டிலமே!   நீ   பகற்போதை  நினக்கென  வரைந்து  கொள்வாய்;
திங்களுக்குப்   புறங்கொடுக்கின்றாய்;    தெற்கினும்      வடக்கினும்
மாறி மாறி வருகின்றாய்;  மலைவாயில் மறைகின்றாய்;  பகற்போதிற்றான்
தோன்றுவாய்;இத்தனை  குறைபாடுடைய  நீ சேரலாதனை ஒப்பதென்பது
நினக்கு   ஆகாது”   என்று    பழிப்பது    போலச்    சேரமானைப்
பாராட்டுகின்றார்.

வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ
திடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப
ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக்
5.கடந்தடு தானைச் சேர லாதனை
யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்
பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி
அகலிரு விசும்பி னானும்
10. பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. (8)

    திணை : பாடாண்டிணை.   துறை:   இயன்மொழி;    பூவை
நிலையுமாம். சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.

    உரை: வையங் காவலர் வழிமொழிந் தொழுக - உலகத்தைக்
காக்கு  மரசர்  வழிபாடு  சொல்லி  நடக்க;  போகம் வேண்டி -
நுகரும் இன்பத்தை விரும்பி; பொதுச்சொற் பொறாஅது -பூமி பிற
வேந்தருக்கும் பொது வென்னும் வார்த்தைக்குப் பொறாஅது;இடம்
சிறிதென்னும்  ஊக்கம் துரப்ப - தன் நாடு இடம் சிறிது என்னும்
மேற்கொள் செலுத்த; ஒடுங்கா உள்ளத்து -மடியாதவுள்ளத்தையும்;
ஓம்பா ஈகை - பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும்;
கடந்து  அடு  தானைச்  சேரலாதனை - வஞ்சியாது எதிர்நின்று
கொல்லும்  படையையுமுடைய   சேரலாதனை;   வீங்கு  செலல்
மண்டிலம் - மிக்க செலவையுடைய மண்டிலமே; யாங்கனம் ஒத்தி -
எவ்வாறொப்பை;  பொழுது  என  வரைதி  -  நீ பகற்பொழுதை
நினக்கெனக்  கூறுபடுப்பை;  புறக்கொடுத்து  இறத்தி -  திங்கள்
மண்டிலத்திற்கு  முதுகிட்டுப்  போதி;  மாறி  வருதி - தெற்கும்
வடக்குமாகிய  இடங்களில்  மாறிமாறி  வருவை; மலை மறைந்து
ஒளித்தி
மலையின்  கண்ணே  வெளிப்படாது  கரப்பை;  அகல்
இருவிசும் பினானும் அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும்; பகல்
விளங்குதி பல்கதிர்   விரித்து - பகற்பொழுது  விளங்குவை பல
கிரணங்களையும் பரப்பி எ-று.

     மாறி வருதி  யென்பதற்கு, இராசிதோறும் மாறி  வருதி
யெனினுமமையும். வீங்கு செலல்  மண்டிலமே,  வரைதி,  இறத்தி,  வருதி,
ஒளித்தி,   நீ   விசும்பினானும்   பகல்   விளங்குதி;  இக்
குறைபாடெல்லாமுடைய   நீ சேரலாதனை யாங்ஙன மொத்தியோ எனக்
கூட்டி வினை முடிவு  செய்க. ஒழுகவென்னு மெச்சம், நுகரு மென ஒரு
சொல்  வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது.  ஒழுகவும்  போக
நுகரவும் வேண்டி யெனினு மமையும். வேண்டி, பொறாது,  துரப்ப  என 
நின்ற  வினை யெச்சங்கள் ஒடுங்கா  வென்னும்  பெயரெச்ச  மறையோடு
முடிந்தன.  இனி,  பகல் விளங்கலை யென்னும்  பாடத்திற்குத்  திங்கண்
மண்டிலமாக்கி   மாறி வருதியென்பதற்குத் தேய்ந்தும்   வளர்ந்தும் 
வருதியெனவும்  பிறவும்அதற்கேற்ப வுரைப்ப.

     விளக்கம் : திங்கள் தோறும் மேடம் முதலாகக் கூறப்படும் இராசி
தோறும்  நின்று  ஞாயிறு  விளக்கம்   செய்யும்   என்னும்   சோதிட
நூன்முறைப்படி  “மாறிவருதி   யென்பதற்கு    இராசிதோறும்   மாறி
வருதியெனினு   மமையும்”   என்றார்.  சேரலாதன்  போல  ஞாயிற்று
மண்டிலமும்  மிக்க  செலவினை  யுடைமைபற்றி,  அவற்கு   அதனை
ஒப்பாகக் கூறுப; அதனை யாராயுமிடத்து, வீங்கு செலல் மண்டிலம் பல
குறைபாடுகளை யுடைத்தாதலால், அவ்வொப்புமை  பொருந்தாதென்பார்,
“யாங்ஙனம்    ஒத்தியோ   வீங்குசெலல்   மண்டிலம்”   என   அம்
மண்டிலத்தையே    கேட்கின்றார்.   ஞாயிறு    விளங்கும்     காலம்
“பகற்பொழுதை நினக்கெனக்  கூறுபடுப்பை”  என்றுரைத்தார்.  ஞாயிறு
மறையத்  திங்கள்  தோன்றித்  திகழ்வதால்,  “திங்களுக்கு முதுகிட்டுப்
போதி” யென்றார்; திங்கள் முதுகிடுதல் இல்லை; ஞாயிறு எழுதற்குமுன்
மறைதலும்,  எழுந்தபின்   மறைதலும்   திங்கட்குண்மையின்.   “பகல்
விளங்குதி”  யென்றதற்குப்  “பகற்பொழுது   விளங்குவை”   யென்று
கூறுதலால்  “பொழுதென  வரைதி”  யென்பதற்குக்  காலத்தைப்  பல
பொழுதுகளாக   (சிறுபொழுது    பெரும்பொழுதுகளாக)   வகுத்தற்கு
ஏதுவாகுவை  யென்றுரைப்பினும்    அமையும்.     உரைகிடந்தவாறே
கொள்ளுமிடத்து,     பகற்பொழுது     நினக்கென்கூறுபடுக்கும்    நீ
அப்பகற்போதிற்றான்     பல்கதிர்களையும்    பரப்பி    விளங்குவை
யென்றதாகக் கொள்க.  இவற்றிற்கு  மாறாகச்  சேரலாதனது ஒளி, இரவு
பகலென   வரையறையின்றி    யெக்காலத்தும்    திகழும்    என்றும்,
“கடந்தடுதானை”யை யுடையனாதலால்,இவன் பிறர்க்குப் புறங்கொடுத்தல்
இலன்என்றும், போரில் வஞ்சிக்கும்  இயல்பிலனாதலால், இடமாறுதலும்,
பகைவர் படைக்கு மாறுதலும் இவன்பால் இல்லையென்றும், அத்தகிரியில்
மறைந்தொளிக்கும் ஞாயிறு  போலாது  எங்குந்  தன்  புகழே   விளக்க
மிக்குத்தோன்றுகின்றானென்றும், விண்ணும் மண்ணும் தன் புகழே பரப்பி
விளங்குகின்றனென்றும் சேரலாதன் மிகுதி கூறியதாகக் கொள்க. காவலர்
வழிமொழிந் தொழுகலால், அரம்பும் குறும்பும் பகையும் பிறவும் நாட்டில்
இல்லையாக,  சேரலாதன்  போகநுகர்ச்சி   மேற்கொண்டிருந்தமையின்,
“வழியொழுக நுகரும் போகம் வேண்டி” யென ஒழுகவென்னும் வினை
யெச்சத்தை நுகரும் என ஒருசொல் வருவித்து முடித்தார். நுகரும் என்பது
அவாய் நிலையான் வந்தது. ஒழுகவும் போகம்  நுகரவும் வேண்டியென்று
கொள்ளுமிடத்தும் நுகரவும் என்பது வருவிக்கப்படும்.

     இனி, “பகல் விளங்குதி” யென்பதைப் “பகல் விளங்கலை” யென்று
பாடங்கொண்டு,  அதற்கேற்பப்  பகலில்  விளக்கம்  செய்யாத  திங்கள்
மண்டிலத்தை “வீங்கு செலல் மண்டிலம்” என்றார்  என்றுகொண்டு, மாறி
வருதி யென்பதற்குத் “தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும்...... உரைப்ப”
என்றார்.   தொல்காப்பிய  வுரைகாரரான   பேராசிரியர்,  இவ்வுரைகாரர்
காட்டியவாறே “பகல் விளங்கலையால்”  என்று  பாடங்கொண்டு, “வீங்கு
செலல் மண்டிலத்தைத்” திங்களாக்கி,  பொழுதென  வரைதி யென்பதற்கு,
“நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி” யென்றும்,  புறக்கொடுத்திறத்தி
யென்பதற்கு, “தோற்றோர்போன்று  ஒளிமழுங்கிச்  செல்கின்றா”யென்றும்,
மாறி வருதி யென்பதற்கு, “மலைசார்ந்த வழித்தோன்றா”யென்றும் பொருள்
கூறுவர்.  வீங்கு  செலல் மண்டிலம் என்பதை விலங்கு செலல் மண்டிலம்
என்று பாடங்கொண்டு, “கடையாயினார் கதியிற் செல்லும் மதியம்” என்று
கூறுவர். இவையெல்லாம் உட்கொண்டே உரைகாரர், “பிறவும் அதற்கேற்ப
வுரைப்ப” என்றார்.