மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.) பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.275 பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.) நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். 276 நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.)
|