அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.) களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். 287 களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.288 அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் - அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)
|