துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல, வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க. (அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.) அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343 ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் ; - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.) இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. 344 ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம், உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குவதற்கு ஏதுவாம். (இழிவுசிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம்
|