இவ்வாறே ஒன்றனைப்பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.) இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.352 மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு - அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும். (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. 'நீக்கி' எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். 'மருள்நீங்கி' என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. 'மாசு அறுகாட்சி' என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது 'நிரதிசய இன்பம்' என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.) ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித்
|