பக்கம் எண் :

151

அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.
367
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம்அஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

368
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)

இன்பம்இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

369
அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத்