எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.429 எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை. ('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.)அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். 430 அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர். (செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.) அதிகாரம் 44. குற்றம் கடிதல்[ அஃதாவது , காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் எனப்பட்ட குற்றங்கள் ஆறனையும் அரசன் தன்கண் நிகழாமல் கடிதல் . இவற்றை வடநூலார் 'பகை வர்க்கம் ' என்ப , இவை குற்றம் என்று அறிதலும் கடிதலும் அறிவுடையார்க்கு அல்லது கூடாமையின் , அதன் பின் வைக்கப்பட்டது. ]
|