செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. 431 செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. 432 இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும் , இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ' ரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும் , 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 433 பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
|