செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.466 செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு. 467 கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான். (துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.)
|