பக்கம் எண் :

203
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்

493
ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

494
இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர். ('அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.)