தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.509 யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். 510 தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், தெளிந்தான்கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், தீராஇடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார்இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.) அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்[ அஃதாவது , அத் தெளிப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளை அறிந்து , அவற்றின்கண்ணே ஆளும்திறம் , அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]
|