உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க. (வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) அதிகாரம் 54. பொச்சாவாமை[ அஃதாவது , உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து தற்காத்தலின் பகையழித்தல் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாரால் பயனுள்ளது இச்சோர்வுஇல்வழியாகலின் , இது சுற்றம் தழாலின் பின் வைக்கப்பட்டது .]
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531 சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. 532
|