பக்கம் எண் :

219
புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்
தெப்பால்நூ லோர்க்கும் துணிவு.

533
பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)

அச்ச முடையார்க் கரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

534
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)