மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.) குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. 604 மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும். ('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். 605 மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக்கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.) |