பக்கம் எண் :

258
மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை.
636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள? ('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.

637
செயற்கை அறிந்தக்கடைத்தும் - நூல் நெறியான் வினை செய்யும் திறங்களை அறிந்த இடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்பொழுது நடக்கின்ற உலக இயற்கையை அறிந்து அதனோடு பொருந்தச் செய்க. (கடைத்தும் என்புழி 'து' பகுதிப்பொருள் விகுதி. 'நூல் நெறியே ஆயினும் உலக நெறியோடு பொருந்தாதன செய்யற்க, செய்யின் அது பழிக்கும்' என, இயற்கை அறிவால் பயன் கூறியவாறு.)

அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்.

638