பக்கம் எண் :

260
அதிகாரம் 65. சொல்வன்மை

[ அஃதாவது , தான் கருதிய வினை முடியுமாற்றால் அமைச்சியல் நடத்தற்கு ஏதுவாய சொற்களைச் சொல்ல வல்லனாதல் .மேல் ' ஒருதலையாச் சொல்லலும் வல்லது' (குறள் . 634) என்றதனையே சிறப்புப்பற்றி விரித்துரைக்கின்றமையின் , இஃது அமைச்சின்பின் வைக்கப்பட்டது . ]

நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.

641
நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான். ('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.)

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

642
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க. (ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)