(துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.) எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு.670 வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.) அதிகாரம் 68. வினைசெயல் வகை[ அஃதாவது , அத்திட்பமுடைய அமைச்சன் அவ்வினையைச் செய்யும் திறம் , அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .] சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 671 சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.)
|