தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.672 தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக. (இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.)ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். 673 ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. (இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.)வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீஎச்சம் போலத் தெறும். 674
|