வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.) பொருள்கருவி காலம் வினைஇடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல். 675 பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினைசெய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. (எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி-தன்தானையும் மாற்றார் தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்ல வினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.)முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 676 முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர்தூக்கிச் செய்க. (முடிவு, ஆகுபெயர், 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரிதாயின் செய்க' என்பதாம்.)செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். 677
|