பக்கம் எண் :

275
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
680
உறை சிறியார் - ஆளும் இடஞ் சிறியராய அமைச்சர்; உள்நடுங்கல் அஞ்சி -தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம்பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார் - அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். (இடம்: நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேல் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிதுகொடுத்தும் சந்தியை ஏற்றுக்கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின் , 'கொள்வர்' என உலகியலால் கூறினார், இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.)

அதிகாரம் 69. தூது

[ அஃதாவது , சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை . அவ் விரண்டனையும் மேல் ' வினை செயல் வகை ' என்றமையின் , இஃது அதன்பின் வைக்கப் பட்டது . தான் வகுத்துக் கூறுவான் , கூறியது கூறுவான்எனத் தூது இருவகைப்படும் . அவருள் முன்னோன் அமைச்சனோடு ஒப்பான் ஆகலானும் , பின்னோன் அவனிற் காற்கூறு குணம் குறைந்தோன் ஆகலானும் , இஃது அமைச்சியலாயிற்று .]

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

681
அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும்,