பல்குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது. (சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம் ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார் முதலிய மக்களும், பன்றி,புலி, கரடி முதலிய விலங்குகளும். 'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம்மூன்றும் அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு என்பதாம்.) கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. 736 கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர். ('அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.)இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. 737 இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம்.
|