அதிகாரம் 78. படைச் செருக்கு [ அஃதாவது , அப்படையது மறமிகுதி . அதிகார முறைமையும்இதனானே விளங்கும்.]
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர். 771 தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.(பு.வெ.மா.வஞ்சி.12)கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772 கான முயல் எய்த அம்பினில் - கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று. ('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று)பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. 773 தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீாத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
|