பக்கம் எண் :

312
தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.)

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.

778
உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.

779
இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?