பக்கம் எண் :

329

அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.)

இனம்போன் றினம்அல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
822
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.)

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

823
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை. (நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை
பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

824
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். (நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம்
குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.)