அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.841 இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.)அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம். 842 அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.)அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. 843 அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது.
|