அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.863 அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. 864 வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது. 865 வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். 866 |