பக்கம் எண் :

346
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
869
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

870
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)

அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல்

[ அஃதாவது, மாணாதபகையை ஆக்குதற் குற்றமும், முன் ஆகிநின்ற பகையுள் நட்பாக்கற்பாலதும், நொதுமலாக்கற் பாலதும், அவற்றின்கண் செய்வனவும், ஏனைக்களைதற் பால தன்கண் செய்வனவும், களையும் பருவமும், களையாக்காற் படும் இழுக்கும் என்று இத்திறங்களை ஆராய்தல். 'இரட்டுற மொழிதல்' என்பதனாற் பகையது திறமும், பகையிடத்து ஆக்கும் திறமும் என விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப் பகைய ஆகலின், இது பகை மாட்சியின் பின் வைக்கப்பட்டது.]