பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று.871 பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. 872 வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.)ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 873 தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார்.
|