தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.) பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு.874 பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.)தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875 தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். 876 |