முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.) உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். 880 செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.) அதிகாரம் 89. உட்பகை[ அஃதாவது , புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து , அது வெல்லும் துணையும் உள்ளாய் நிற்கும்பகை , இதுவும் களையற்படுவதன் பாலதாகலின் , பகைத்திறம் தெரிதலின் பின் வைக்கப்பட்டது.]
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாஆம் இன்னா செயின். 881 நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக.
|