பக்கம் எண் :

356

(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வௌவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.)

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
896
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

897
தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? (உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் செறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)